கொடநாடு வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தொடர்புபடுத்தி கருத்து கூட அமைச்சர் உதயநிதிக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
கொடநாடு கெலை மற்றும் கொள்ளை தொடர்பான வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதாக எதிர்கட்சியினர் அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுக்களை மேடைகளில் பேசி வந்தனர்.
இந்த பேச்சு கொடநாடு வழக்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் தொடர்புடையர்கள் என்று கைது செய்யப்பட்ட பலரிடம், காவல்துறை மற்றும் புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பான சட்டமன்றத்திலும் காரசாரமான விவாதமும் நடைபெற்று வந்தது.
இதனிடையே கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி குறித்து அமைச்சர் உதயநிதி பேசியது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து நீதிமன்றத்தில் புகார் அளித்த எடப்பாடி பழனிச்சாமி கொடநாடு வழக்கில் தனது பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில், அமைச்சர் உதயநிதி தன்னைப்பற்றி அவதூறு கருத்துக்களை பேசி வருகிறார்.
இந்த வழக்கில் தன்னை பற்றி அவதூறாக பேச உதயநிதிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், ரூ.1.10 கொடி மான நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிச்சாமியை தொடர்புபடுத்தி பேச அமைச்சர் உதயநிதிக்கு இடைக்கால தடை விதித்திருந்தார்.
மேலும் இந்த வழக்கில் உதயநிதி 2 வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்த நிலையில், உதயநிதி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை நவம்பர் 2-ந் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி குறித்து பேச உதயநிதிக்கு விதிக்கப்பட்ட தடையும் நவம்பர் 2-ந்’ தேதி வரை நீடித்து உத்தரவிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“