தனது நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக நடிகைகள் த்ரிஷா, குஷ்பு மற்றும் நடிகர் சிரஞ்சீவி ஆகியோர் மீது நடிகர் மன்சூர் அலி கான் வழங்கு தொடர்ந்திருந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நிலையில், அவருக்கு ரூ1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
லியோ படத்தில் நடிக்கிறோம் என்றதும், த்ரிஷாவுடன் பெட்ரூம் சீன் இருக்கும், குஷ்புவை தூக்கி போட்ட மாதிரி ரோஜாவை தூக்கி போட்ட மாதிரி த்ரிஷாவையும் போடலாமா என்று யோசித்தேன். இப்போதெல்லாம் படங்களில் ரேப் சீன் வைக்கப்படுவதில்லை என்று சமீபத்தில் ஒரு நேர்காணலில் நடிகர் மன்சூர் அலிகான் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மன்சூரின் இந்த பேச்சு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்த நடிகை த்ரிஷா, இவரை போன்ற ஆட்கள் சமூகத்திற்கு ஆபத்து நல்லவேளை இதுவரை நான் அவருடன் சேர்ந்து நடிக்கவில்லை. இனிமேலும் நடிக்க மாட்டேன் என்று பதிவிட்டிருந்தார். த்ரிஷாவின் இந்த பதிவுக்கு பலரும் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், மன்சூரின் இந்த பேச்சுக்கு திரைத்துறையில் கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலரும் கடும் கண்டங்களை தெரிவித்தனர்.
மேலும் இயக்குனர்கள் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் நடிகர்கள் மற்றும் நடிகர்கள் சங்கம் மட்டுமல்லாமல், சக நடிகர்கள் இயக்குனர்கள் என பலரும் தனிப்பட்ட முறையில் மன்சூர் அலிகான் பேச்சுக்கு கண்டனங்களை தெரிவித்திருந்தனர். ஒரு கட்டத்தில் மன்சூர் அலிகான் தனது பேச்சுக்கு த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்டதை தொடர்ந்து அவரும் மன்சூரின் மன்னிப்பை ஏற்றுக்கொண்டதாக தெரிவித்திருந்தார்.
இதனிடையே மன்சூரின் பேச்சு குறித்து கண்டனம் மற்றும் விமர்சனங்கள் செய்த குஷ்பு, த்ரிஷா மற்றும் சிரஞ்சீவி ஆகியோர் மீது மன்சூர் அலிகான் மானநஷ்ட வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் அவர்கள் மூவரிடமும் ரூ1 கோடி நஷ்ட ஈடு கொடுக் உத்தரவிடுமாறு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பொதுவெளியில் இப்படி அவதூராக பேசலாமா என்று மன்சூர் அலிகானிடம் கேள்வி எழுப்பினார்.
மேலும், இந்த விவகாரத்தில் த்ரிஷா தான் வழக்கு தொடர வேண்டும். பொதுவெளியில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை மன்சூர் அலிகான் தெரிந்துகொள்ள வேண்டும். தொடர்ந்து இதே போன்று சர்ச்சை செயல்களில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது என்று கூறிய நீதிபதி, தான் எந்த தவறும் செய்யவில்லை என்றால் மன்சூர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
இந்த விவகாரத்தில் த்ரிஷா, குஷ்பு, சிரஞ்சீவி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை இன்றைய தேதிக்கு ஒத்தி வைத்திருந்தார். அதன்படி இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், மன்சூர் அலிகான் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகைகள் பேசிய கருத்தை அவதூறாக கருத முடியாது என்று கூறிய நீதிபதி, மன்சூர் அலிகானுக்கு ஒரு லட்சம் அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“