லியோ டிரெய்லர் வெளியிடப்பட்ட ரோஹினி திரையரங்கில் இருக்கைகள் சேதப்படுத்தப்படதற்கு போலீசாரின் தவறான கையாளுதலே காரணம் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் லியோ. இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில், அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள லியோ படம் வரும் அக்டோபர் 19-ந் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் டிரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது. 2-வாரங்களுக்கு முன்னதாகவே ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக வெளியிடப்பட்ட லியோ டிரெய்லர் விஜய் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த டிரெய்லரில் விஜய் பேசிய கெட்டவார்த்தை ஒரு பக்கம் சர்ச்சையை ஏற்படுத்தி வந்தாலும் படத்தின் டிரெய்லர் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. இதனிடையே லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா போலீசார் அனுமதி காரணமாக ரத்து செய்யப்பட்டதால், டிரெய்லரை திரையரங்கில் வெளியிடலாம் என்று தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்தது.
அதன்படி சென்னையில் சில திரையரங்குகளில் லியோ டிரெய்லர் திரையிடப்பட்டது. இதில் ரோஹினி திரையரங்கில் லியோ டிரெய்லரை கண்டு ரசித்த ரசிகர்கள் பலரும் அந்த திரையரங்கின் இருக்கைகளை சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளனர். இந்த சம்பவம் சமூகவலைதளங்களில் பெரும் வைரலாகி வரும் நிலையில், பலரும் விஜய் ரசிகர்களை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இதனிடையே ரோஹினி திரையரங்கில் இருக்கைகள் சேதமடைந்ததற்கு போலீசாரின், தவறான கையாளுதலே காரணம் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், நேற்றைய தினம் சென்னை ரோஹினி திரையரங்கில் நடந்த சம்பவத்திற்கு போலீசாரே காரணம். ரசிகர்களுக்கு முன் அனுமதி வழங்கி இருந்தால் இது போன்ற ஒரு சம்பவம் நடந்திருக்காது.
இந்த போன்ற நிகழ்வுகளுக்கு காவல்துறையினர் முன் அனுமதி வழக்கி சில கட்டுப்பாடுகள் விதித்து ரசிகர்களை கையாண்டிருந்தால் இது போன்ற ஒரு சேதம் ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருந்திருக்காது. எனவே இது போன்ற சமயங்களில் காவல்துறை உரிய அனுமதி வழங்கி, எந்த ஒரு சேதமும் ஏற்படாத வகையில் பாதுகாப்பும் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
லியோ டிரெய்லர் திரையிடுவது தொடர்பான அனுமதி கேட்டு எங்களை யாரும் அனுகவில்லை. அதேபோல் ரோஹினி திரையரங்கில் நடந்த சம்பவம் குறித்து இதுவரை எந்த புகாரும் வரவில்லை என்றும், கூறிய காவல்துறையினர், எந்த ஒரு புகாரும் இல்லாமல் நடவடிக்கை எடுத்தால் அது விஜய் ரசிகர்கள் மீது வேண்டுமென்றே நடவடிக்கை எடுப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கும் என்றும் கூறியுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.