நடிகர் வடிவேலு மற்றும் நடிகர் சிங்கமுத்து இருவரும் இணைந்து முன்பு பல திரைப்படங்களில் நடித்து வந்தனர். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக படங்களில் ஒன்றாக நடிப்பதில்லை. மேலும், இருவருக்கும் இடையே நிலம் தொடர்பான வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், நடிகர் வடிவேலு கடந்த ஆகஸ்ட் மாதம் நடிகர் சிங்கமுத்து மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்தார். அதில் நடிகர் சிங்கமுத்து யூடியூப் சேனல்களுக்கு அளித்த பேட்டியில் தன்னைப் பற்றி பொய்யான தகவல்களைக் கூறி தரக்குறைவாகப் பேசியுள்ளதாகக் குற்றம் நாட்டிய நடிகர் வடிவேலு, பொது மக்கள் மத்தியில் தனக்குள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியதற்காக ரூ. 5 கோடி மான நஷ்ட ஈடாக சிங்கமுத்துவுக்கு உத்தரவிட வேண்டும். தன்னைப் பற்றி அவதூறாகப் பேச சிங்கமுத்துக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரியிருந்தார்.
இந்த வழக்கில் நடிகர் சிங்க முத்து பதிலளித்த பின்னரும், அவதூறு வழக்கு தொடர்ந்த பிறகும், நடிகர் சிங்கமுத்து தொடரந்து அவதூறு கருத்துகளைப் பேசி வருவதாக நடிகர் வடிவேலு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.
இந்நிலையில், நடிகர் வடிவேலு குறித்து அவதூறு கருத்துகளைப் பேசக்கூடாது என நடிகர் சிங்கமுத்துவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 6) தடை விதித்தது. மேலும், நடிகர் சிங்கமுத்து பேட்டி அளித்த யூடியூப் சேனல்களுக்கு அவதூறு வீடியோக்களை நீக்க சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல்களுக்கு கடிதம் எழுத வேனண்டம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“