Child Artist Manasvi: ’இமைக்கா நொடிகள்’ திரைப்படத்தில் நடிகை நயன்தாராவின் மகளாக நடித்தவர் குழந்தை நட்சத்திரம் மானஸ்வி.
இவர் காமெடி நடிகர் கொட்டாச்சியின் மகள். அந்தப் படத்தில் தனது நடிப்புக்காக பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் பெற்ற மானஸ்வி, ‘சதுரங்க வேட்டை 2’ படத்தில் அரவிந்த் சாமியின் மகளாக நடித்துள்ளார். ஆனால் அந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை.
இந்நிலையில், தற்போது த்ரிஷாவின் மகளாக ‘பரமபதம் விளையாட்டு’ திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் வாய் பேசாத, காது கேளாத குழந்தையாக நடித்திருக்கும் மானஸ்விக்கு, முந்தைய படத்தை விட வரவேற்பு அதிகமாக இருக்கும் என்கிறார்கள் படக்குழுவினர்.
இதற்கிடையே நடிகர் கொட்டாச்சி புது வீட்டுக்கு குடி போயிருக்கிறார். இது குறித்து அவர்,
“கிட்டத்தட்ட பதினைந்து வருடக் கனவு இது!சென்னை வந்த புதுசுல மேன்ஷன்ல என் வாழ்க்கை ஆரம்பிச்சது. அதுக்கப்புறம் 800 ரூபாய் வாடகையில் வீடு எடுத்து இருந்தேன். கொஞ்சம் வளர்ந்து 2000 ரூபாய் வாடகைக்கு வீடு பார்த்தேன்.
என்னுடைய திருமணத்துக்குப் பிறகு நிறைய விஷயங்கள் என் வாழ்க்கையில் நடக்க ஆரம்பிச்சது. திருமணமாகி 7,000 ரூபாய் வாடகைக்குக் குடியேறினோம். ஆனா, அவ்வளவு ரூபாய் கொடுத்து வாடகைக்கு போகிறோமேன்னு வருத்தமா இருக்கும்.
ஒவ்வொரு தடவை வாடகை கொடுக்கும்போதும், அடுத்த முறை கண்டிப்பா நாம வீடு வாங்குறோம் என்கிற எண்ணம் வந்துட்டே இருக்கும். இப்போ வாங்கணும், அப்போ வாங்கணும்னு பல தடவை நினைச்சிருக்கேன்.
என் பொண்ணு மானஸ்வி பிறந்ததுக்கு அப்புறம், எங்க லைஃப்ல பாசிட்டிவ் விஷயங்கள் நிறைய நடக்க ஆரம்பிச்சிருக்கு. பாப்பா பிறந்து இரண்டு வயசுல 15,000 ரூபாய் வாடகைக்குப் போனோம். மூணு வயசுல மானஸ்வி நடிக்க ஆரம்பிச்சிட்டா. அப்படியே வாழ்க்கைத் தரம் கொஞ்சம் கொஞ்சமா வளர்ச்சி அடைந்தது. இப்போ அவளுக்கு ஆறு வயசு. நாங்க ஆசைப்பட்ட சொந்த வீட்டை இப்போ வாங்கிட்டோம்
இதுக்கு, முழுக்க முழுக்க என் மனைவி அஞ்சலிதான் காரணம். ஆரம்பத்திலிருந்தே வாடகை வீடு அவங்களுக்குப் பிடிக்கலை. அவங்க டப்பிங் பேச ஆரம்பிச்சதும், கண்டிப்பா நாம வீடு வாங்குறோம்னு ரொம்ப முயற்சி எடுத்தாங்க. என் வீட்டிலுள்ள இரண்டு தேவதைகளால் மட்டும்தான் இது சாத்தியமாச்சு” என தனது மனைவியையும், மகளையும் பற்றி நெகிழ்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.