டப்பிங் யூனியனிலிருந்து தாம் நீக்கப்பட்டுள்ளதாகவும், '96' தன்னுடைய கடைசி படமாக இருக்கலாம் என பின்னணி பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.
மீ டூ இயக்கம் மூலம், கவிஞர் வைரமுத்து மீது பாலியல் தொல்லை புகார் அளித்தார் பின்னணி பாடகி சின்மயி. அக்டோபர் மாதம் முழுவதும் இந்த புயல் தான் தமிழகத்தில் வீசியது. வைரமுத்து இவரது புகாருக்கு மறுப்பு தெரிவித்ததுடன், 'என் மீது வழக்குப் பதிவு செய்யுங்கள், நான் நீதிமன்றத்தில் உங்களை பார்த்துக் கொள்கிறேன்" என்று கூறினார்.
'விரைவில், வைரமுத்து மீது நிச்சயம் வழக்கு தொடருவேன்' என்று கூறியிருந்த சின்மயி, பிறகு அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதற்கிடையே, சின்மயி அங்கம் வகிக்கும் டப்பிங் யூனியனுக்கும், அவருக்கும் சிறிய பிரச்சனை ஏற்பட்டது.
இந்நிலையில், 2 ஆண்டுகளாக உறுப்பினர் கட்டணம் செலுத்தவில்லை என்று கூறி டப்பிங் யூனியன் தன்னை நீக்கியுள்ளதாகவும், இதன் மூலம் தனது வளர்ச்சியை தடுக்க முடியாது என்றும் சின்மயி தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்த அவரது பதிவில், "டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து தன்னை நீக்கி உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக சந்தா தொகை செலுத்தவில்லை என சங்கம் தெரிவித்துள்ளது. இதுபற்றி எனக்கு எந்த அறிவிப்பும் கொடுக்கவில்லை. சங்கத்தில் இருந்து தன்னை நீக்கியுள்ள நிலையில், 96 தனது கடைசி படமாக இருக்கலாம்" என்று தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, "மீடூ விவகாரத்தில் தனது குரல் ஓங்கியதன் விளைவாகத்தான் தமிழ்நாடு டப்பிங் யூனியன் தலைவர் ராதாரவியால் நான் நீக்கப்பட்டுள்ளேன். எனது சந்தாவாக 5 லட்சம் கேட்கப்பட்டது. யூனியன் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால், நான் சந்தா செலுத்தத் தேவையில்லை தனக்குக் கூறப்பட்டது அதனால்தான் கட்டவில்லை" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதேசமயம், சந்தா கட்டாதது மட்டும் சின்மயி நீக்கத்துக்கு காரணமல்ல என்று கூறப்படுகிறது. சமீபத்தில் அவர் யூடிப் சேனல் ஒன்றுக்கு அளித்தப் பேட்டியில் 'தமிழ்நாடு டப்பிங் யூனியலில் கிட்டத்தட்ட 15 புகார்கள் விசாரிக்காமல் நிலுவையில் உள்ளது' என்று யூனியன் நிர்வாகத்துக்கு எதிராக பேசியதாகவும், அதுகுறித்து விளக்கம் கேட்டு அனுப்பிய கடிதத்துக்கும் பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், நேற்று நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவு செய்தே உறுப்பினர் அந்தஸ்தில் இருந்து சின்மயி நீக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது.