நடிகர், தயாரிப்பாளர், மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் இயக்கத்தின் நிறுவனத் தலைவருமான கமல்ஹாசன், “டெல்லியில் போராடும் பெண் மல்யுத்த வீரர்களின் போராட்டத்துக்கு ஆதரவு அளித்து ட்வீட் ஒன்று செய்திருந்தார்.
இந்த ட்வீட்டை ரீட்வீட் செய்த பாடகி சின்மகி, “தங்கள் அருகாமையில் இருக்கும் நபர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தபோது வாய் திறக்க மறுத்தது ஏன்?
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான வலியை அனுபவித்தவர்கள்தான். ஆனால் நீங்கள் தேர்ந்தெடுத்து குரல் கொடுப்பது ஏன்? எனக் கேள்வியெழுப்பினார்.
இது கமல்ஹாசன் ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்களை கொந்தளிக்க செய்துள்ளது.
இதையடுத்து சின்மயியை கமல்ஹாசன் ரசிகர்கள் கேள்விகளால் துளைத்தெடுத்து வருகின்றனர். அதில் ரசிகர் ஒருவர் இந்தக் கேள்வியை நீங்கள் மற்ற அரசியல்வாதிகளை பார்த்து ஏன் கேட்கவில்லை” என வினவியுள்ளார்.
மற்றொருவர் நாட்டின் பிரச்னைக்காக கமல்ஹாசன் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். அவரை எதிர்ப்பது ஏன்? எனக் கேள்வியெழுப்பி உள்ளார்.
கடந்த காலங்களில் மீடூ (#Metoo) என்ற இயக்கம் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது. அப்போது பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஹேஷ்டேக் வாயிலாக புகார் அளித்தனர். அப்போது பாடலாசிரியர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்போதுவரை வைரமுத்து மீது சின்மயி தனது புகாரை அழுத்தமாக கூறிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“