Chinmayi Protest: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் அளித்திருந்தார்.
இந்த விவகாரம் நாட்டையே உலுக்கியது. இந்த வழக்கை விசாரித்த மூவர் குழு, போதிய ஆதாரம் இல்லாததால் இவ்வழக்கை தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் தலைமை நீதிபதிக்கு எதிராக போராட்டம் நடத்த அனுமதி கேட்டு, பாடகி சின்மயி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்.
கடந்தாண்டு அக்டோபரில் இணையத்தில் வைரலாகிய ‘மீடூ’ பிரச்னையில் முக்கியமானவர் சின்மயி. கவிஞர் வைரமுத்து தன்னை பாலியல் ரீதியாக சீண்டியதாக பரபரப்பைக் கிளப்பினார்.
பின்னர் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகியிருக்கும் மற்ற பெண்களின் கதைகளை பெயர் குறிப்பிடாமல் தனது ட்விட்டரில் ஷேர் செய்து வந்தது குறிப்பிடத் தக்கது.
இந்நிலையில், தற்போது தலைமை நீதிபதிக்கு எதிராக போராட்டம் நடத்தும் விஷயத்தைக் கேள்விப்பட்ட நெட்டிசன்கள், உள்ளூரில் பிஞ்சுக் குழந்தைகளைக் கூட கொடூரன்கள் விட்டு வைப்பதில்லை. இன்னும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் எத்தனையோ நம்மூரின் மூலை முடுக்குகளில் நடந்து வருகின்றன. அதற்கெல்லாம் சின்மயி வாய் திறக்காமல் மெளனம் காப்பது ஏனோ என்ற கேள்விகளை முன் வைக்கின்றனர்.