வைரமுத்து பாடல் எழுதியதற்காக ’மகாராஜா’ படத்தை பார்க்க போவதில்லை என பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.
நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவான மகாராஜா திரைப்படம், கடந்த ஜூன் 14 ஆம் தேதி தியேட்டரில் வெளியானது. பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ள இப்படத்துக்கு கவிஞர் வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார்.
இந்நிலையில் வைரமுத்து பாடல் எழுதியதற்காக மகாராஜா படத்தை பார்க்க போவதில்லை என பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது X பக்கத்தில் வெளியிட்ட பதிவில் “பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் தொல்லை பற்றி பேசும் மகாராஜா படத்துக்கு வைரமுத்து பாடல்கள் எழுதியது குறித்து தற்போது தான் எனக்கு தெரிய வந்தது.
உலகிலேயே தமிழ் திரையுலகம் மட்டும்தான் தங்களுக்கு பிடித்த ஒருவரை துஷ்பிரயோகம் செய்பவர் என சொன்னதால், வேலை செய்யவிடாமல் ஒருவருக்கு தடை விதித்தது.
நான் அந்த படத்தை பார்க்க நினைக்கவில்லை. அந்த படத்தை பார்த்து கருத்து கூறியதற்காக பத்திரிக்கையாளர் ஆஷாமீரா துன்புறுத்தப்பட்டது பற்றியும் தற்போது தான் தெரிய வந்தது.
தமிழ் சினிமாவில் இருக்கும் அதிகாரம் படைத்தவர்கள் ஏதாவது நல்லது அல்லது சரியான விஷயத்தை செய்வார்கள் என நான் நம்பிக் கொண்டே இருக்கிறேன். ஆனால் மீண்டும் மீண்டும் ஏமாற்றமே ஏற்படுகிறது.
பாலியல் தொல்லை கொடுத்தவர்கள், பலாத்காரம் செய்தவர்களை ப்ரொமோட் செய்யும் அனைவரும் அதற்கான பலனை பல மடங்கு அனுபவிப்பார்கள்” என அதில் சின்மயில் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“