Chiranjeevi Requests Rajini and Kamal: தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி தனது 151-வது திரைப்படமான ”சைரா நரசிம்ம ரெட்டி” திரைப்படம் வரும் அக்டோபர் 2-ம் தேதி தெலுங்கு, தமிழ், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
இப்படத்தில் சிரஞ்சீவியுடன் இணைந்து அமிதாப் பச்சன், நயன்தாரா, தமன்னா, விஜய் சேதுபதி, சுதீப் மற்றும் ஜெகபதி பாபு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். தற்போது இந்தப் படத்திற்கான புரொமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதன்படி சிரஞ்சீவி சமீபத்தில் கலந்துக் கொண்ட நேர்க்காணலில் ரஜினி, கமலின் அரசியல் பிரவேசம் குறித்து கேள்வி எழுப்பப் பட்டது.
கமல் ஹாசன் - ரஜினிகாந்த்
அதற்கு பதிலளித்த சிரஞ்சீவி, "அரசியல் என்பது இப்போது பணத்தை மையப்படுத்தியதாக மாறியுள்ளது. நல்லது செய்ய அரசியலில் நுழைந்தாலும், இப்போது நம்மால் அதைச் செய்ய முடியாது. எனது நம்பர் 1 இடத்தை விட்டுவிட்டு நான் அரசியலில் நுழைந்தேன். ஆனால் எனது சொந்தத் தொகுதியிலேயே, என்னைத் தோற்கடிக்க கோடிக்கணக்கில் செலவிட்டார்கள், அதேபோல் தான் என் சகோதரர் பவனுக்கும் நடக்கிறது" என்றார்.
மேலும் தொடர்ந்த சிரஞ்சீவி, “கமல் இந்த முறை வெல்வார் என்று நான் நினைத்தேன், ஆனால் அது நடக்கவில்லை. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், பொறுமையுடன் இழப்புகளையும் அவமானங்களையும் எதிர்கொள்ளலாம், ஆனால் என்னைப் போன்ற சென்சிடிவ் தன்மை கொண்டவர்களால் அரசியலில் இருக்க முடியாது. கமலும், ரஜினியும் என்னைப் போல் இருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் அவர்களிடம் எனது ஒரே வேண்டுகோள் என்னவென்றால், அவர்கள் அரசியலில் இருக்க வேண்டாம். ஏனெனில் அது மதிப்புக்குரியது அல்ல. இருப்பினும் தோல்விகளை மீறி நல்லது செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தால், அரசியலுக்கு வாருங்கள், ஒரு நாள் விஷயங்கள் மாறக்கூடும்” என்றார்.