Christmas Release Tamil Movies: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஒரே சமயத்தில் நான்கு படங்கள் வெளியாவதால் தியேட்டர்கள் பற்றாக்குறையாகும் நிலை ஏற்படும் என்று திரையரங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில வருடங்களுக்கு முன்பெல்லாம் ஒரே நாளில் அத்தனை கதாநாயகர்களின் படம் ஒன்றாக ரிலீசாகும் நிலை இருந்தது. தற்போது அந்நிலை மாறி, படத்தின் வசூலை மூன்று நாளில் எடுக்க வேண்டிய நிலை இருக்கிறது. பெரிய பட்ஜெட் படங்கள் என்றால் ஓரிரு வாரங்களில் எடுத்தாக வேண்டும். எனவே மிக அதிகமான திரையரங்குகளில் படம் வெளியாகும் முறையினை கையாள்கின்றனர்.
அதனால் பெரும்பாலும் படங்கள் ஒரே நாளில் வெளியாவதை தவிர்க்கின்றனர். ஆனாலும் சில சமயங்களில் அப்படி ஒரே நாளில் பல படங்கள் வெளியாகும் சூழல் உருவாகிறது. கிறிஸ்துமஸ், பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை தினங்கள் அதில் அடக்கம்!
வருகிற கிறிஸ்துமஸ் தினத்தஒயொட்டி வெளியாக இருக்கும் படங்களால் தியேட்டர் புக்கிங் செய்வதில் சற்று குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதுவும் கடந்த சில வருடங்களில் படம் தொடர்ந்து இரு வாரங்களுக்கு மேல் ஓடாமலிருந்த நிலையை மாற்றி, 2.0 படம் வசூல் ரீதியாக தற்போதும் நல்ல நிலையிலேயே ஓடிக்கொண்டிருப்பதால் தியேட்டர்கள் கிடைப்பதில் கூடுதல் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.
கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கனா, தனுஷ் நடிப்பில் மாரி 2, விஜய்சேதுபதியின் சீதக்காதி ஆகியன ஒன்றாக வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக நல்ல தியேட்டர்களை பிடிப்பதில் மூன்று தரப்பும் முனைப்பு காட்டுகின்றது. எனவே தியேட்டர்கள் தரப்பிலும் குழப்ப நிலையே காணப்படுகின்றது.
இன்னும் ஒருவாரமே இருக்கும் நிலையில் சிக்கல் தீராததால் மூன்று முனைகளும் முடிந்த அளவு திரைகளை கைப்பற்ற கடுமையாக முயற்சி செய்கின்றது. படம் ஜெயிப்பது, வசூல் குவிப்பது ஆகியவற்றில் ஏற்படும் போட்டி அப்புறம்! அதற்கு முன்பாக தியேட்டர்களைப் பிடிப்பதில் குஸ்தி போட வேண்டியிருக்கிறது.
தியேட்டர்கள் அமைவதும், படத்தின் வெற்றியைத் தீர்மானிக்கும் காரணிகளில் ஒன்று என்பதை மறுக்க முடியாது.
திராவிட ஜீவா