தனது குடும்பத்தினரால் தாக்கப்பட்டு காயம் அடைந்துள்ளதாக சீரியல் நடிகை வைஷ்ணவி தன்ராஜ் வீடியோ வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல இந்தி சின்னத்திரை நடிகை வைஷ்ணவி தன்ராஜ். 35 வயதான வைஷ்ணவி இந்தி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மேலும் பிரபல சி.ஐ.டி தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார்.
இந்தநிலையில், வைஷ்ணவி தனது குடும்பத்தினர் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் தனக்கு உதவி தேவை என்றும் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ வேகமாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில், தனது முகம், கைகளில் ஏற்பட்டுள்ள காயத்தை காட்டும் வைஷ்ணவி, “எனக்கு இப்போது உதவி தேவைப்படுகிறது. நான் இப்போது மும்பை காஷ்மீரா காவல் நிலையத்தில் இருக்கிறேன். நான் எனது குடும்பத்தினரால் தாக்கப்பட்டு காயமடைந்துள்ளேன். எனக்கு ஊடகத்தினர், செய்தி நிறுவனங்களின் உதவி தேவை" என்று கூறியுள்ளார்.
இந்த வீடியோவை வைஷ்ணவி தனது நண்பரான ஹிமான்ஷு சுக்லா என்பவருக்கு அனுப்பியுள்ளார். அதை அவர் 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்ட நிலையில், இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.
இதற்கிடையில் இந்த தாக்குதல் குறித்து வைஷ்ணவி மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் உள்ள காஷ்மிரா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். “வைஷ்ணவி, தனது சகோதரன் மற்றும் தாய் மீது புகார் கொடுத்துள்ளார். அவர்களை வரவழைத்து விசாரித்தோம். குடும்பப் பிரச்சினை காரணமாக இந்த சண்டை நடந்துள்ளது. அவர்களை எச்சரித்து அனுப்பினோம்” என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதின் சஹ்ராவத் என்ற நடிகரை திருமணம் செய்த வைஷ்ணவி 2016-ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்துவிட்டு தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“