Cinema news in tamil: ஏவுகணை நாயகன், விண்வெளி விஞ்ஞானி, கல்வியாளர், எழுத்தாளர், பேச்சாளர் என பல்துறை வித்தகராக இருந்து மகத்தான பங்களிப்பை செய்தவர் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம். மக்களின் குடியரசுத் தலைவர் என அழைக்கப்பட்ட அவர், இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவராக 2002 முதல் 2007 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார். குடியரசுத் தலைவர் பொறுப்புக்குப் பின் பள்ளி மற்றும் கல்லூரிகளில் எழுச்சியுரை ஆற்றினார்.
"கனவு காணுங்கள்" என்பது அவர் இளையோரிடம் கூறும் பொன்மொழி. வங்கக் கடல் முட்டும் தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தில் பிறந்த அவர் ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒரு உத்வேகமாகவும் முன்மாதிரியாகவும் திகழ்கிறார். அவரது கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் அவரது குறிப்பிடத்தக்க வாழ்க்கை முறை ஆகியவற்றை உள்ளடக்கிய உறுதியைக் கவுரவிப்பதற்காக அவரது பிறந்த நாள் உலக மாணவர் தினமாக கொண்டாடப்படுகிறது.
இப்படியாக பல்வேறு தரப்பினராலும் போற்றப்படும், வணங்கப்படும் முன்னாள் ஜனாதிபதியும் விஞ்ஞானியுமான மறைந்த டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் பற்றிய படம் தயாராக உள்ளது. "விக்னானியன்" என தலைப்பிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தை மலையாள இயக்குனர் ஸ்ரீகுமார் இயக்குகிறார். இப்படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டரை அடுத்த வாரம் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட இருக்கிறார்.
இதற்கிடையில், இப்படத்தில் கலாம் கதாபாத்திரத்தில் நடிக்க மூன்று கோலிவுட் நடிகர்களிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மற்ற நடிகர்களுக்கான தேர்வும் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் முடிய இருக்கிறது. படம் தமிழில் எடுக்கப்பட்டாலும், மற்ற மொழிகளிலும் படம் வெளியாகும் என்றும் முதலில் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப் பார்க்கிறோம் என்றும் படத்தின் இயக்குநர் ஸ்ரீகுமார் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.