Cinema news in tamil: கடந்த 2015ம் ஆண்டு மதுரை மேலூருக்கு அருகிலுள்ள ஓர் குக் கிராமத்தில், இருள் சூழ்ந்த நடு இரவில் ஒரு அம்மா மற்றும் அவரது 2 வயது மகன் குடிகார தந்தையால் துன்புறுத்தப்பட்டு, வீட்டை விட்டு துரத்தப்படுகிறனர். அந்த அம்மா தனது 2 வயது மகனை கையில் தூக்கிக் கொண்டு சுமார் 13 கிலோமீட்டர் நடந்து அவரது தாய் வீட்டிற்கு செல்கிறார். அந்த தாய் வேறு யாரும் அல்ல தனது அக்கா தான் என்கிறார் ‘கூழாங்கல்‘ திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் ராஜ்.
இப்படி ஒரு எளிமையான கதைக்கருவை கொண்ட கதையை எழுதி, அதற்கு மிக எளிமையான தலைப்பையிட்டு ‘கூழாங்கல்‘, அந்த திரைப்படத்திற்கு சர்வதேச திரைப்படவிழாவில் விருதையும் வென்றுள்ளார் இயக்குனர் வினோத் ராஜ்.
கடந்த ஞாயிற்று கிழமை நெதர்லாந்து நாட்டில் நடைபெற்ற 50 வது ரோட்டர்டேம் சர்வதேச திரைப்பட விழாவில் டைகர் விருது பிரிவில் 'கூழாங்கல்‘ திரைப்படம் தேர்வாகி விருதை வென்றது. ரோட்டர்டேம் சர்வதேச திரைப்பட விழாக் குழு, சர்வதேச அளவில் இயக்கப்படும் சுயாதீனமான மற்றும் சோதனை திரைப்படங்களை அங்கீகரிக்கும் விதமாக விருதுகளை வழங்கி வருகிறது. இந்த திரைப்பட விழாவில் வெல்லும் படங்களுக்கு சுமார் 40,000 யூரோக்கள் வழங்கப்படுகின்றது. இந்நிலையில், இந்த (டைகர் விருது) விருதை பெறும் முதல் தமிழ்த் திரைப்படம் என்ற பெருமையையும், இந்தியாவில் 2வது திரைப்படம் என்ற பெருமையையும் கூழாங்கல்‘ திரைப்படம் பெற்றுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு இயக்குனர் சனல்குமார் சசிதரன் இயக்கிய ‘செக்ஸி துர்கா‘ என்ற மலையாளப் படத்துக்கு இந்த விழாவில் விருது கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " t.me/ietamil
இந்த திரைப்படம் படமாக்கப்பட்ட பிறகு அதை 'எடிட்' செய்யாமல், தன்னுடைய அக்காவிற்கும், ஊர் மக்களுக்கும் திரையிட்டு காட்டிய போது, அவரது அக்கா உட்பட அனைவரும் கண்ணீர் வடித்ததாகவும், சிலர் தங்களின் வாழ்வியலோடு ஒத்து உள்ளதாகவும், கூறியதாக இயக்குனர் வினோத் இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு அளித்த நேர்காணலில் குறிப்பிடுகிறார். அதோடு 'கூழாங்கல்‘ திரைப்படத்திற்கு 'டைகர் விருது' கிடைத்ததில் அவருடைய ஊர் மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தாகவும் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் படம் இயக்க வேண்டும் என்கிற கனவில் கோடம்பாக்கம் வந்த இவர், அந்த கனவை அடைய பல வருடங்களாக கடுமையாக உழைத்திருக்கிறார். அதோடு படங்களிலும், குறும் படங்களிலும் உதவி இயக்குனராகவும் பணி புரிந்திருக்கிறார். பின்னர் கோவில்பட்டியில் உள்ள மணல் மகுடி நாடகக் குழுவால் ஈர்க்கப்பட்டு அந்தக் குழுவோடு சில காலம் பயணித்திருக்கிறார். மேலும் இந்த திரைப்படம் குறித்து பின்வருமாறு கூறியுள்ளார்.
"நான் நாடக குழுவில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என விரும்பினேன். எனவே புகழ்பெற்ற நாடக இயக்குனரும் எழுத்தாளருமான முருக பூபதி தலைமையிலான மனல் மகுடியில் நாடக குழுவில் சேர்ந்தேன். அந்த குழுவோடு இந்தியா முழுவதும் பயணம் செய்ததேன். அவர்கள் அரங்கேற்றிய நாடங்களை உள்வாங்கினேன். அவர்களின் உணர்வுகளையும், கற்றுக் கொண்ட பாடங்களையும் எனது படத்தில் கொண்டு வர முயற்சி செய்துள்ளேன். என்னுடைய இந்த வெற்றியில் அந்த குழுவினருக்கும் பங்குண்டு.
2015ம் ஆண்டு அக்காவிற்கு நடந்த சம்பவத்தில் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. அக்காவிற்கு ஆறுதல் சொல்லக் கூட இயலவில்லை. இந்த சம்பவம் என்னை மிகவும் பாதித்தது. இதையே இந்த படத்தின் மூலம் சொல்ல முயன்றுள்ளேன். மனைவி குழந்தையை வீட்டை விட்டு வெளியேற்றிய கணவர், தனிய ஆளாக எதையும் சமாளிக்க இயலாது என்று எண்ணுவதோடு, ஒரு குடும்பத்திற்கு பெண் எவ்வளவு முக்கியம் என்பதையும் அவன் இறுதியில் உணர்கிறான். இந்த படத்தில் அந்த குடிகார தந்தையின் உள் உணர்வு, அவர் மேற்கொள்கின்ற பயணம், மற்றும் அவருக்குள் ஏற்படுகிற மாற்றம் போன்றவற்றைப் படம் பிடிக்க முயற்சி செய்துள்ளோம். அதோடு படம் பிடிக்க இருந்த இடங்களை இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து விசிட் செய்தோம்.
இந்த படத்தை முடிக்க போதிய பணம் இல்லாமல் கிடப்பில் இருந்தது. இயக்குனர் ராம் அவர்கள், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு எங்கள் படம் பற்றி அறிமுகம் செய்தார். அதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளை பார்த்த அவர்கள் படத்திற்கு க்ரீன் சிக்னல் தந்ததால் பட பிடிப்பை முழுமையாக முடித்தோம்" என்று இயக்குனர் வினோத் ராஜ் கூறியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.