ரஜினிகாந்த் நடித்த லிங்கா படத்தை தயாரித்த பிரபல சினிமா தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் மூச்சுத்திணறல் காரணமாக இன்று பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த லிங்கா, பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடித்த பஜ்ரங்கி பைஜான் உள்ளிட்ட பெரிய பட்ஜெட் படங்களைத் தயாரித்தவர் சினிமா தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ். இவர் பல தமிழ், கன்னட சினிமாக்களில் நடித்துள்ளார்.
தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து அவர் இன்று பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவராக உள்ள அவரடு மகன் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மேற்பார்வை செய்து வருகிறார்.
தயாரிப்பாளர் வெங்கடேஷுகு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகங்கள் எழுந்துள்ளது என்றாலும் அது குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் வெளியாகவில்லை.
ராக்லைன் வெங்கடேஷ் சமீபத்தில் நடிகையும் அரசியல்வாதியுமான சுமலதா அம்பரீஷுடன் தொடர்பு கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. சுமலதா அம்பரீஷுக்கு சமீபத்தில் கொரோனா பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அண்மையில், வெங்கடேஷ் மற்றும் சுமலதா இருவரும் மறைந்த கன்னட நடிகர் அம்பரீஷுக்கு சிலை அமைப்பது தொடர்பாக கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவை சந்தித்தனர். இருப்பினும், சுமலதாவுக்கு அறிகுறிகள் இல்லாததால் அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
விரைவில், சினிமா தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் உடல்நிலை குறித்தும் அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்தும் தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"