சூர்யா - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகியுள்ள படம் தானா சேர்ந்த கூட்டம். இன்னுமொரு ராபிஹூட் படம்.
குடிசை மாற்றுவாரிய குடியிருப்பில் வசிக்கும் சூர்யா. அவரது அப்பா சிபிஐயில் பியூனாக வேலை பார்க்கிறார். மகனை சிபிஐ அதிகாரியாக வேண்டும் என்று சொல்லிச் சொல்லி வளர்க்கிறார். மகனும் அதையே குறிக்கோளாக கொண்டு தகுதிகளை வளர்த்துக் கொண்டு நேர்காணலுக்கு தயாராகிறார்.
சூர்யாவின் தந்தைக்கும், சிபிஐ அதிகாரி உத்தமனுக்கும் இடையே சின்ன மோதல் இருக்கிறது. ஒரு வீட்டுக்கு சிபிஐ ரெய்டு போன போது, அந்த வீட்டில் உள்ளவர்களுடன் டீல் பேசி பணம் பெற்றுக் கொள்கிறார், சிபிஐ அதிகாரி உத்தமன். இதை தெரிந்த சூர்யாவின் அப்பா, மொட்டை கடுதாசியாக எழுதிப் போடுகிறார். அது உத்தமன் கைக்கே வருகிறது. அந்த பகையை வைத்தே, நேர்காணலில் கேள்வி கேட்டு, சூர்யாவை நோகடிக்கிறார்.
சூர்யாவோடு வசித்து வரும் நண்பன் போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்ற கனவோடு காத்துக் கொண்டு இருக்கிறார். எல்லா தகுதிகள் இருந்தும், உயர் அதிகாரி கேட்ட பணத்தை கொடுக்க முடியாததால் வேலை கிடைக்கவில்லை. வேலை கிடைக்காத வருத்தம், மனைவியின் புறக்கணிப்பு ஆகியவற்றால் மனம் உடைந்த சூர்யாவின் நண்பர் தற்கொலை செய்து கொள்கிறார்.
நியாயமாக வேலை கிடைக்காது என்பதை உணர்ந்து கொண்ட சூர்யா எடுக்கும் அவதாரம்தான், படத்தின் கதை.
காரைக்குடியில் உள்ள மத்திய அமைச்சரின் வீட்டுக்கு ரெய்டு போகிறார், சூர்யா. கூடவே, ரம்யா கிருஷ்ணன், செந்தில், சத்யா கூட்டணியோடு. ரெய்டு முடிந்து காரில் வரும் போதுதான், இவர்கள் போலி என்பதை உடைக்கும் இடம் ரசிக்க வைக்கிறது. பத்திரிகையாளராக வரும் கீர்த்தி சுரேஷும் போலி பத்திரிகையாளர் என்பது தெரியும்போது எழுந்து உட்கார வைக்கிறது.
இந்த கூட்டத்தைப் பிடிக்க, சிபிஐ அதிகாரிகள் கூட்டம் போட்டு நவரச நாயகன் கார்த்திக்கை அழைப்பதும், அவருடைய அறிமுக காட்சியும் வழக்கமான காட்சியே. இயக்குநர் விக்னேஷ் சிவன் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருக்கலாம்.
போலீஸ் அதிகாரிகளுக்கு தங்களைப் பற்றி தெரிந்துவிட்டது என்பதை தெரிந்த பின்னரும், நகைக்கடைக்கு ரெய்டு போக சூர்யா முடிவெடுப்பது, படத்தின் வேகத்தை அதிகரிக்க வைக்கிறது. சூர்யா - கார்த்திக் சந்திக்கும் காட்சி, க்ளைமாக்ஸில் சூர்யா, உத்தமனிடம் இருந்து தப்பிக்கும் காட்சி யாரும் எதிர்பாராதது. உத்தமனிடம் தன்னை சுடச்சொல்லி சூர்யா சொல்லும் காட்சியில் அவர் நடிப்பு அசத்தல்.
ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பெரிய வேலை ஏதும் இல்லை. படம் தொடங்கும்போது கொஞ்ச நேரம் வருகிறார். டூயட் பாடுகிறார். காணாமல் போகிறார். க்ளைமாக்ஸுக்கு முன்பு சில காட்சியில் வருகிறார். க்ளைமாக்ஸில் அவர் இல்லவே இல்லை. ரம்யா கிருஷ்ணன், மீண்டும் தன்னை நிரூபித்திருக்கிறார். சிபிஐ அதிகாரியாக அவருடைய நடை உடை பிரமாதம். நிஜ சிபிஐ அதிகாரிகளிடம் சிக்கும் போதும் நடிப்பில் தான் சீனியர் என்பதை நிரூபிக்கிறார்.
படத்தில் வசனங்கள் பல இடங்களில் கைத்தட்ட வைக்கிறது. சிபிஐக்கு இண்டர்வியூ நடக்கும் போது ஒரு பெண்ணிடம் எதற்காக சிபிஐயில் சேர வேண்டும் என்று கேள்வி கேட்கப்படுகிறது. “ஊழலை ஒழிக்க விரும்புகிறேன். அதனால்தான்...’’ என்று அவர் பதில் சொல்வார். உங்கள் பெயர் என்ன என்று இன்னொரு அதிகாரி கேட்க, அவர், ‘சசிகலா’ என்று சொல்ல தியேட்டரே சிரிக்கிறது.
அனிருத் இசையில், ‘சொடக்கு மேல சொடக்கு போடுது...’ பாடல் ஆட்டம் போட வைக்கிறது. மற்றப்பாடல்கள் கேட்கும்படியுள்ளது. லஞ்சத்தை ஒழிக்க லஞ்சம் கொடுப்பதுதான் கொஞ்சம் உறுத்தலாக இருக்கிறது. தலைப்புக்கும் கதைக்கும் சம்மந்தம் இல்லை. அதற்காகவே அடிக்கடி சூர்யா, ‘தானா சேர்ந்த கூட்டம்’ என்று பஞ்ச் டயலாக் பேசுவது எரிச்சலூட்டுகிறது.
தேவையில்லாத பில்டப்களை தவிர்த்திருந்தால், படத்தின் விறுவிறுப்பு கூடியிருக்கும். படம் பார்க்க தானா கூட்டம் வர வாய்ப்பிருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.