சினிமா விமர்சனம் : இதயத்தை தொடும் இரும்புத்திரை

உலகம் முழுவதும் பரவலாக அறியப்பட்டாலும், தமிழகம் அதிகமாக அறியப்படாத ‘தகவல் திருட்டை’ மையமாக வைத்து கதையை சொல்லியிருக்கிறார், இயக்குநர் பி.எஸ்.மித்ரன்.

ச.கோசல்ராம்

நடிகர் விஷால் தயாரித்து நடித்திருக்கும் படம் இரும்புதிரை. உலகம் முழுவதும் பரவலாக அறியப்பட்டாலும், இன்னமும் தமிழகத்தில் அதிகமாக அறியப்படாத ‘தகவல் திருட்டை’ மையமாக வைத்து கதையை சொல்லியிருக்கிறார், புதுமுக இயக்குநர் பி.எஸ்.மித்ரன். எல்லா தரப்பினரும் புரியும் விதமாக, டெக்னாலஜி விசயங்களை சொன்னதில் இயக்குநர் மித்ரன் ஜெயித்திருக்கிறார்.

கடன் வாங்கியே அவமானப்பத்திய அப்பா. அதனாலேயே இறந்து போன அம்மா. ஊரில் இருக்க பிடிக்காமல் ராணுவத்தில் சேர்ந்து மேஜர் பதவியில் இருக்கிறார், விஷால். அவருடைய மாமா வீட்டுக்கு பக்கத்து வீட்டில் ஒருவர் தற்கொலை செய்து கொள்ள, அவர் வாங்கிய கடனுக்காக மனைவியை டார்ச்சர் செய்கிறார், வங்கியில் இருந்து வந்தவர். அவரை அடித்து உதைத்ததால், வேலைக்கு பிரச்னை வருகிறது. மன நல மருத்துவமனை சென்று இயல்பாக இருப்பதாக சான்றிதழ் வாங்கி வந்தால்தான், வேலையில் சேர முடியும் என மேல் அதிகாரி சொல்ல, மருத்துவமனை செல்கிறார்.

மருத்துவர் சமந்தாவிடம் கையெழுத்து வாங்க, சொந்த ஊருக்கு செல்லும் விஷால், டாக்டர் சொன்னபடி தினமும் குடும்பத்தினருடன் போட்டோ எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டு வருகிறார். அப்போதுதான், தங்கையில் காதல் விவகாரம் தெரிய வருகிறது. பணம் இல்லாமல் திருமணம் நின்று போனதை அறிந்த விஷால், தங்கை திருமணத்திற்காக கடன் வாங்க முயல்கிறார்.

வங்கிகள் கடன் தர மறுக்கிறது. அப்போது வங்கி முன்னால் உள்ள கடை வைத்திருந்த ஒருவர், குறுக்கு வழியில் கடன் வாங்கித் தருவதாக சொல்கிறார். வேறு வழியில்லாமல் அதற்கு விஷால் சம்மதிக்கிறார். வங்கியில் இருந்து பணம் வந்த ஒரிரு நாளில் மொத்த பணத்தையும் சைபர் கிரைம் கொள்ளையர்கள் திருடிவிடுகிறார்கள். தங்கையின் திருமணத்தை நடத்த, அந்த பணத்தை தேடி அலைகிறார்.

அப்போது, இந்த மோசடியில் பெரிய நெட் ஒர்க் இருக்கிறது என்பதை உணர்கிறார். எப்படியெல்லாம் தகவல்களை பெருகிறார்கள் என்பதை தெரிந்து வில்லன் அர்ஜூனை நெருங்கும் போது, அவர் மிக எளிதாக விஷாலை டீல் செய்து அனுப்பிவிடுகிறார். ஆதாரம் இல்லாமல் அர்ஜூனை மடக்க முடியாது என்பதை தெரிந்து கொண்டு அவர் பாணியில் அவரை மடக்குகிறார், விஷால். இதுதான் கதை.

விஷாலின் மாமாவாக வரும் ரோபோ ஷங்கர், பேசும் வசனங்களை கேட்டு தியேட்டரே அதிர்ந்து சிரிக்கிறது. சொந்த ஊருக்கு சென்ற விஷால், ஊர் பெரியவர்களுக்கு மது வாங்கிக் கொடுக்கும் போது, ‘இது ஆர்மிகாரங்களுக்கு மட்டும்தான் தருவார்கள்’ என்று சொல்லும் போது, ஊர் பெரியவர், ‘நானும் ஆர்மியில் இருக்கேன். எனக்கு தரலியே’ என்று சொல்ல, விஷால் எந்த ஆர்மி என்று கேட்பார். அவரோ, ‘ஓவியா ஆர்மி’ என்று சொல்ல தியேட்டரே அதிர்கிறது. யுவன் சங்கர் ராஜாவின் இசை மிரள வைக்கிறது.

சமந்தா திருமணத்துக்கு பின் நடித்த முதல் தமிழ் படம். அழகாக இருக்கிறார். அட்வைஸ் செய்கிறார். உறுதுணையாக நின்று உதவுகிறார். வழக்கமான காதல் காட்சிகள் இல்லாமல் பார்த்துக் கொண்டது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

படத்தில் சைபர் கிரைம் பற்றி பல டீட்டெயில் சொல்லும் போதும் போரடிக்காமல் பார்த்துக் கொண்டுள்ளார், இயக்குநர் மிதரன். ஆனால் சில காட்சிகளில் தொடர்ச்சி விட்டுப் போவதை எப்படி கவனிக்க தவறினார் என்பது புரியவில்லை. வில்லன் அர்ஜூன், வேலைக்காரன் பட வில்லனை நினைவுப்படுத்துவதை தவிர்த்து இருக்கலாம்.

ஹைட்டெக்கான ஒரு விஷயத்தை, நகைச்சுவை, செண்டிமெண்ட் என்ற கலவையோடு அனைத்து தரப்பையும் இரும்புத்திரை கவரும்.

×Close
×Close