திரையரங்குகள் வேலைநிறுத்தம் : சென்னை மல்டிபிளக்ஸ்கள் கலந்து கொள்ளாதது ஏன்?

ஆங்கில, இந்தி, தெலுங்கு, மலையாள படங்களை கொண்டு திரையரங்குகளை ஓட்ட முடியும் என்பதாலேயே சென்னை மல்டிபிளக்ஸ்கள் வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ளவில்லை.

ஜான் பாபுராஜ்

மார்ச் 16 முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளும் காலவரையற்ற போராட்டத்தில் கலந்து கொள்ளும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து அனைத்து திரையரங்குகளும் நேற்று மூடப்பட்டன. ஆனால், சென்னை மாநகரில் இயங்கும் மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளவில்லை. ஏன் என்ற ஒற்றை கேள்விக்குப் பின்னால் பல சுயநல அரசியல்கள் உள்ளன.

க்யூப், யுஎஃப்ஓ உள்ளிட்ட டிஜிட்டல் சர்வீஸ் புரவைடர்ஸ் நிறுவனங்களின் அதிகபடி கட்டணத்தில் ஆரம்பித்தது பிரச்சனை. இந்த நிறுவனங்கள் தங்களது கட்டணத்தை குறைத்துக் கொள்ள வேண்டும், திரையரங்குகளின் அதிகபடி பார்க்கிங், கேன்டீன் மற்றும் டிக்கெட் கட்டணங்களை முறைப்படுத்த வேண்டும் என பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி மார்ச் 1 முதல் புதிய தமிழ்ப் படங்கள் வெளியாகாது என்று தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்தது.

சினிமா வர்த்தகம் என்ற சங்கிலியின் முதல் கண்ணியாக விளங்குகிறவர்கள் தயாரிப்பாளர்கள். அவர்கள் படம் தயாரித்தால் மட்டுமே சினிமா விநியோகம், சினிமா திரையிடல் என அடுத்தடுத்த கண்ணிகள் இயங்க முடியும். இதனை உணர்ந்தும், பாதிப்பு தங்களுக்கு இல்லை என்ற சுயநல நோக்கில் தயாரிப்பாளர்களின் போராட்டத்தில் திரையரங்குகள் கலந்து கொள்ளவில்லை. எனினும் புதிய தமிழ்ப் படங்கள் வெளியாகாதது அவர்களின் வர்த்தகத்தை பாதித்தது. அவசர கூட்டம் நடத்தியவர்கள், மார்ச் 16 முதல் திரையரங்குகள் காலவரையின்றி மூடப்படும் என்று அறிவித்தனர். கேளிக்கை வரியை ரத்து செய்தல், ஏசி திரையரங்குகளுக்கு ரூபாய் 5 ம், பிற திரையரங்குகளுக்கு ரூபாய் 3 ம் பராமரிப்பு கட்டணம் தர வேண்டும் உள்பட அரசு நிறைவேற்றித் தருவதாகச் சொன்ன வாக்குறுதிகளுக்கு அரசு ஆணை பிறப்பிப்பதுவரை வேலைநிறுத்தம் தொடரும் என்று அறிவித்தனர். தங்களின் போராட்டம் அரசு நிறைவேற்றுவதாகச் சொன்ன கோரிக்கைகளை முன்வைத்தே தவிர, தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு எதிராக அல்ல என்று விளக்கம் அளித்தனர்.

திரையரங்கு உரிமையாளர்களின் அறிவிப்பை தொடர்ந்து, தயாரிப்பாளர்கள் சங்கம் தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தியது. மார்ச் 16 முதல் எந்தப் படப்பிடிப்பும், போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும், சினிமா நிகழ்ச்சிகளும் நடைபெறாது என்று அறிவித்தனர். பத்திரிகைகளில் சினிமா விளம்பரம் முதற்கொண்டு போஸ்டர் ஒட்டுவதுவரை அனைத்தும் தடை செய்யப்பட்டன. வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் நடைபெறும் படப்பிடிப்புகளுக்கு மட்டும் மார்ச் 23 வரை படப்பிடிப்பு நடத்திக் கொள்ள சலுகை அளிக்கப்பட்டது.

மார்ச் 16 ஆம் தேதி அனைத்து திரையரங்குகளும் காலவரையற்ற வேலைநிறுத்தத்துக்கு தயாரான நிலையில், அதற்கு இரண்டு தினங்கள் முன்பு சென்னை திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் தலைமையில் சென்னை திரையரங்கு உரிமையாளர்கள் அவசர கூட்டம் நடத்தினர். சென்னை மல்டிபிளக்ஸ் உரிமையாளர்களே இதில் பெரும்பாலும் கலந்து கொண்டனர். மார்ச் 16 நடைபெறும் வேலைநிறுத்தத்தில் தாங்கள் கலந்து கொள்ளப் போவதில்லை என்றும், ஆங்கில, மலையாள, தெலுங்கு மற்றும் பழைய தமிழ்ப் படங்களை திரையிடுவது என முடிவு செய்திருப்பதாகவும் அறிவித்தனர். அதன்படி நேற்றைய வேலைநிறுத்தத்தில் சென்னை மல்டிபிளக்ஸ்கள் மட்டும் கலந்து கொள்ளவில்லை.

டிஜிட்டல் சர்வீஸ் புரவைடர்ஸ் நிறுவனங்களுக்கு எதிரான தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நியாயமான போராட்டத்துக்கு திரையரங்கு உரிமையாளர்கள் ஆதரவு தந்திருக்க வேண்டும். அவர்கள் ஆதரவு தந்து திரையரங்குகளை மூடியிருந்தால் க்யூபும் பிற நிறுவனங்களும் இறங்கி வந்திருக்கும். பிரச்சனை தயாரிப்பாளர்களுக்குத்தானே என்று திரையரங்குகள் சுயநலமாக சிந்தித்ததே பிரச்சனை வளர்ந்து கொண்டு செல்வதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. இப்போது திரையரங்கு உரிமையாளர்களுக்குள்ளேயே பிரிவு. சென்னை மல்டிபிளக்ஸ் மட்டும் வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ளவில்லை. இதற்கு சுயநலம் மட்டுமே காரணம்.

தமிழகத்தை எடுத்துக் கொண்டால் சென்னையில் மட்டுமே பிற மொழிப் படங்கள் நல்ல வசூலுடன் ஓடுகின்றன. சென்னை பாக்ஸ் ஆபிஸின் டாப் 5 இல் எப்போதும் இந்தி, ஆங்கிலப் படங்கள் இடம்பிடிக்கின்றன. உதாரணமாக தற்போது ஓடிக்கொண்டிருக்கும் ஆங்கிலப் படங்களின் கடந்த ஞாயிறுவரையான வசூலை பார்ப்போம்.

டெத் விஷ் (ஞாயிறுவரை) – 60.33 லட்சங்கள்

பிளாக் பேந்தர் (ஞாயிறுவரை) – 3.21 கோடிகள்

டாம்ப் ரைடர் (முதல் 3 நாளில்) – 75.30 லட்சங்கள்

இந்திப் படங்களின் வசூலை பார்ப்போம்.

ஹேட் ஸ்டோரி 4 (முதல் 3 நாளில்) – 20.28 லட்சங்கள்

பாரி (ஞாயிறுவரை) – 70.41 லட்சங்கள்

அய்யாரி – 30.65 லட்சங்கள்

இந்திப் படங்கள் சராசரியாக 50 லட்சங்களுக்கு மேல் வசூலிக்கின்றன. ஆங்கிலப் படங்கள் அனாயாசமாக 1 கோடியை தாண்டுகின்றன. அதேநேரம் தமிழ்ப் படங்களின் வசூலை பார்ப்போம்.

கேணி – 19.14 லட்சங்கள்

தாராவி – 8.63 லட்சங்கள்

வீரா – 26.99 லட்சங்கள்

ஏண்டா தலையில் எண்ணை வைக்கல – 4.36 லட்சங்கள்

நாச்சியார் – 4.25 கோடிகள்

கலகலப்பு 2 – 5.25 கோடிகள்

இந்த புள்ளி விவரங்களிலிருந்து சுமாரான ஆங்கில, இந்திப் படங்களே 90 சதவீத நேரடி தமிழ்ப்படங்களைவிட அதிகம் வசூலிப்பது தெளிவாகிறது. அறம், அருவி படங்களின் சென்னை வசூலைவிட பிளாக் பேந்தர் ஆங்கில படத்தின் வசூல் அதிகம். அதேபோல் முன்னணி நடிகர்களின் தெலுங்குப் படங்கள் 50 லட்சங்களை சதாராணமாக வசூலிக்கின்றன. பாகமதி தெலுங்கு டப்பிங் படம் 4 கோடிகளுக்கு மேல் சென்னையில் வசூலித்தது. நாச்சியார், கலகலப்பு 2 போன்று இரண்டு மாதத்துக்கு ஒரு தமிழ்ப் படம்தான் நல்ல வசூலை பெறுகின்றன.

ஆக, சென்னை மல்டிபிளக்ஸை பொறுத்தவரை ஆங்கில, இந்தி, தெலுங்கு படங்களை கொண்டே அவர்களால் திரையரங்குகளை ஓட்ட முடியும். பிறமொழிப் படங்களே அவர்களுக்கு அதிக லாபத்தை தருகின்றன. சென்னைக்கு வெளியே இது சாத்தியமில்லை. தமிழ்ப் படங்களே தனித்திரையரங்குகளுக்கு ஆதாரம்.

ஆங்கில, இந்தி, தெலுங்கு, மலையாள படங்களை கொண்டு திரையரங்குகளை ஓட்ட முடியும் என்பதாலேயே சென்னை மல்டிபிளக்ஸ்கள் நேற்றைய வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ளவில்லை. இது சுயநலமன்றி வேறில்லை. தயாரிப்பாளர்கள் சங்கத்தின் போராட்டத்துக்கு எதிர்திசையில் சென்னை மல்டிபிளக்ஸ்கள் துடுப்புப் பிடிப்பதற்கு வேறு காரணங்களும் உள்ளன. க்யூப் பிரச்சனையில் உடனடியாக அரசு தலையிட வேண்டும் என்று அபிராமி ராமநாதன் நேற்று கூறியுள்ளார். ஆனால், தயாரிப்பாளர்களின் போராட்டம் வெறும் க்யூபை முன்வைத்து மட்டுமில்லை. அவர்கள் வேறு பல கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளனர்.

மல்டிபிளக்ஸ்களில் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்ய டிக்கெட்டுக்கு 35 ரூபாய்கள் வாங்குகின்றனர். ஒருவரே 10 டிக்கெட்கள் வாங்கினாலும் டிக்கெட்டுக்கு 35 வீதம் 350 ரூபாய் பிடித்துக் கொள்கிறார்கள். இது கூடாது.

* திரையரங்கு கேன்டீனில் தண்ணீர் பாட்டில், பாப்கார்ன் உள்பட அனைத்தும் பல மடங்கு விலை வைத்து விற்கப்படுகிறது. அது தவிர்க்கப்பட வேண்டும்.

* பார்க்கிங் கட்டணம் டூ வீலருக்கு 10, ஃபோர் வீலருக்கு 30 என்று அரசு நிர்ணயித்த கட்டணத்தையே வாங்க வேண்டும்.

* டிக்கெட் கட்டணம் முறைப்படுத்த வேண்டும். ரசிகர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது.

* சொந்த புரொஜக்டர் இல்லாத திரையரங்குகளுக்கு புரொஜெக்டர் வாடகை கட்டணத்தை தயாரிப்பாளர்களிடமிருந்து வசூலிக்கக் கூடாது.

இப்படி பல கோரிக்கைகளை தயாரிப்பாளர்கள் சங்கம் முன்வைத்துள்ளது. இவையனைத்தும் பிற தனி திரையரங்குகளைவிட சென்னை மல்டிபிளக்ஸ் திரையரங்குகளையே அதிகம் பாதிக்கும். அரசு ஆணை பிறப்பித்த பின்பும் சத்யம் குழுமம் தவிர பிற திரையரங்குகளில் ஒரு மணிக்கு 10 ரூபாய்வீதம் ஒரு டூ வீலருக்கு முப்பது ரூபாய் வசூலிக்கிறார்கள். திரையரங்குகளின் இந்த கட்டண கொள்ளையையும் சேர்த்து ஒழுங்குப்படுத்த தயாரிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை வைப்பதாலேயே திரையரங்கு உரிமையாளர்கள் அவர்களுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை. மாறாக, தயாரிப்பாளர்கள் முதலில் நடிகர்களின் சம்பளத்தை கட்டுக்குள் கொண்டு வரட்டும் என்கிறார்கள். நடிகர்களின் சம்பளத்துக்கு கட்டுப்பாடு தேவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது என்பதை கறாராக பின்பற்றினாலே நடிகர்களின் இன்றைய சம்பளம் பாதியாக குறைந்துவிடும்.

சென்னை மல்டிபிளக்ஸ்கள் வேலைநிறுத்தத்தில் அடித்துள்ள பல்டி அவர்கள் எத்தனை சுயநலமாக நடந்து கொள்கிறார்கள் என்பதற்கான சிறந்த உதாரணம்.

×Close
×Close