சினிமா வேலை நிறுத்தம் வாபஸ்: விஷாலை வீழ்த்திய சக்திகள்

சண்முக பார்த்திபன்

வரும் மே 30 முதல் தமிழ் திரைப்படத் துறையில் வேலை நிறுத்தம் நடைபெறும் என்னும் முடிவைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாகத் தயாரிப்பாளர் சங்கத் தலைவரும் நடிகர் சங்கத்தின் செயலாளருமான விஷால் அறிவித்திருக்கிறார். இதன் மூலம் தயாரிப்பாளர் சங்கத்துக்கும் திரையரங்குகளுக்கும் இடையே நடக்கவிருந்த மோதல் தவிர்க்கப்பட்டுள்ளது.

விஷால் வேலைநிறுத்த அறிவிப்பை வெளியிட்டதிலிருந்தே திரைத்த்துறையில் பெரும் சலசலப்புகள் எழ ஆரம்பித்தன. வேலைநிறுத்ததுக்கு எதிரான குரல்கள் பெருமளவில் கேட்டன. திருட்டு டிவிடி, திரையரங்கக் கட்டணம், வரிச் சலுகை முதலான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே இந்த வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டது. குறிப்பாகத் திருட்டு விசிடியை ஒழிக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்னும் கோரிக்கை பிரதானமாக இருந்தது.

திருட்டு டிவிடியை ஒழிக்க வேண்டும் என்பதிலும் அது தமிழ்ப் படங்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது என்பதிலும் எந்த ஐயமும் இல்லை. அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் திருட்டு டிவிடியை ஒழிக்க முடியாது என்பதிலும் ஐயம் இல்லை. ஆனால், வேலைநிறுத்தம் இதற்கான தீர்வாக இருக்க முடியுமா?
பல்வேறு தரப்புகளின் கருத்து என்ன?

தமிழ்த் திரையுலகம் பல்வேறு தரப்பினர்களைக் கொண்டது. தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், இதர தொழிலாளர்கள், திரையரங்குகள், வினியோகஸ்தர்கள் எனப் பல தரப்பினர் திரைத் துறையில் இருக்கிறார்கள். எல்லா நடவடிக்கைகளும் நிறுத்தப்படும் என்றால் சம்பந்தப்பட்ட எல்லாத் தரப்புகளுடனும் கலந்தாலோசித்த பிறகே இந்த முடிவை எடுத்திருக்க வேண்டும் என்பதைப் பலரும் சுட்டிக்காட்டினார்கள். தமிழ்த் திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் அபிராமி ராமநாதன் இந்த அறிவிப்பை வெளிப்படையாகவே எதிர்த்தார். வினியோகஸ்தர்கள் பலரும் இதை எதிர்த்திருக்கிரார்கள். வேலைநிறுத்த அறிவிப்புக்கு முன்பு பல தரப்பினரையும் கலந்தாலோசிக்கவில்லை என்பதும் வேலைநிறுத்தத்தால் திரைத் துறையின் சிக்கல்கள், நஷ்டங்கள்தாம் கூடும் என்பதும் மாற்றுத் தரப்பினரின் வாதங்கள்.

பாகுபலி போன்ற சில விதிவிலக்குகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் திரைப்படங்கள் திரையரங்குகளில் நன்றாக ஓடிப் பணம் சம்பாதித்துத் தருவதே இல்லை. திருட்டு விசிடி இதற்கு முக்கியப் பிரச்சினையாக இருந்தாலும் அது மட்டுமே காரணம் இல்லை. படங்களின் உள்ளடக்கம், கை மீறிப் போகும் பட்ஜெட் ஆகிய பிரச்சினைகளும் உள்ளன.

சந்தை மதிப்பும் பட்ஜெட்டும்

ஒவ்வொரு நடிகருக்கும் சந்தை மதிப்பு எவ்வளவு என்பது ஓரளவுக்கு எல்லாருக்குமே தெரியும். குறிப்பிட்ட ஒரு நடிகர் அல்லது இயக்குநரின் அண்மைக் காலப் படங்களின் சராசரி வசூல் விவரத்தை வைத்து அவரது சந்தை மதிப்பை நிர்ணயம் செய்துவிடலாம். இந்தச் சராசரி மதிப்புக்கும் மேல் அவரது படத்தின் பட்ஜெட் இருந்தால் அது வர்த்தக ரீதியாகப் புத்திசாலித்தனம் அற்ற நடவடிக்கையாகவே இருக்கும். ஒரு கோப்பைத் தேநீரின் விலை 8 ரூபாய், ஆனால், அந்தக் கோப்பைத் தேநீரின் உற்பத்திச் செலவு 10 ரூபாய் என்றால் தேநீர் வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்த முடியுமா? ஒரு நடிகர் அல்லது இயக்குநரின் வசூல் சார்ந்த சந்தை மதிப்பு 10 அல்லது 15 கோடி என்றால் அவரை வைத்து 20 கோடிக்குப் படமெடுப்பது யாருடைய தவறு?

திரையரங்குகளில் கூட்டம் குறைந்துள்ள இந்தக் காலத்திலும் சில படங்கள் நன்கு ஓடுகின்றன. வசூலை அள்ளுகின்றன. ஆனால், தயாரிப்புச் செலவை எகிறவைத்தால் அது யாருடைய குற்றம்? நடிகர்கள் யாராவது வசூலைப் பொறுத்துச் சம்பளம் வாங்கிக்கொள்கிறோம் என்று சொல்கிறார்களா?

வரும் 26ஆம் தேதியன்று தொண்டன், பிருந்தாவனம், ஒரு இயக்குநரின் காதல் கதை ஆகிய மூன்று படங்கள் வெளிவரவிருப்பதாக அறிவிப்புகள் வந்துவிட்டன. திரையரங்கங்களின் பட்டியலும் வெளியாகிவிட்டது. போதாக்குறைக்கு சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கைக் கதையான சச்சின்: ஒன் பில்லியன் ட்ரீம் என்னும் படத்தின் தமிழ் வடிவமும் வெளியாகவிருக்கிறது. 30ஆம் தேதியிலிருந்து வேலை நிறுத்தம் நடக்கும் என்றால் 26ஆம் தேதி இத்தனை படங்கள் எப்படி வெளியாகும் என்னும் கேள்வியே இந்த வேலை நிறுத்த அறிவிப்பின் ‘வலிமை’யைப் பறைசாற்றிவிட்டது. எதிர்பார்த்ததுபோலவே அந்த அறிவிப்பு இப்போது திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

பன்முக அணுகுமுறை தேவை

திரைத் துறையின் பிரச்சினைகள் பன்முகம் கொண்டவை. தீர்வும் அப்படித்தான் இருக்க முடியும். அனைத்துத் தரப்பினரும் கலந்து பேசி நல்ல முடிவுகளை எடுக்க வேண்டும். இல்லையேல் சிக்கல்கள் வளர்ந்துகொண்டே போகும். வேலைநிறுத்தம் அல்ல, யதார்த்தத்தை உணர்ந்துகொண்ட திறமையான வேலைகளின் மூலமாகவே திரைத் துறையின் சிக்கல்களைத் தீர்க்க முடியும். இதை விஷால் உள்பட அனைத்துத் தரப்பினரும் உணர வேண்டும். இனியாவது அனைத்துத் தரப்பினருடன் கலந்து பேசி தீர்க்கமான முடிவுகளை எடுப்பது திரைப்படத் துறைக்கு நல்லது.

×Close
×Close