தமிழகம் முழுவதும் சினிமா தியேட்டர்கள் மூடல்!

தயாரிப்பாளர் சங்க போராட்டத்துக்கு பெப்ஸி அமைப்பும் ஆதரவு தெரிவிப்பதால், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையில்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திரைப்பட துறையினரின் வேலை நிறுத்தம் காரணமாக, தமிழகம் முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டன. படப்பிடிப்புகளும் நடக்காத காரணத்தால் சினிமா துறை முற்றிலுமாக முடங்கியுள்ளது.

சினிமா படங்கள் டிஜிட்டல் முறையில் ஒளிபரப்பாகி வருகிறது. இதற்கான கட்டணத்தை அந்த நிறுவனங்கள் உயர்த்திவிட்டன. இதனை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மார்ச் 1ம் தேதி முதல், புதிய படங்கள் திரையிடுவது நிறுத்தப்பட்டுவிட்டது. கடந்த 15ம் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுவிட்டன.

புதிய படங்கள் வெளியாகாததால், தியேட்டர்களில் கூட்டம் குறையத் தொடங்கியது. இரவு 2வது காட்சிகளை பல தியேட்டர்களில் போடுவதில்லை. இந்நிலையில் கேளிக்கை வரியை அரசு முற்றிலும் நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, நேற்று முதல் தமிழகம் முழுவதும் சினிமா தியேட்டர்களும் மூடப்பட்டன. சென்னையில் மட்டும் 100க்கும் மேற்பட்ட தியேட்டர்கள் நேற்று முதல் மூடப்பட்டுள்ளன. மதுரை, திருச்சி, கோவை சுற்று வட்டாரப் பகுதிகளில் சில திரையரங்குகள் மட்டுமே இயங்கின.

தயாரிப்பாளர் சங்கத்தின் தொடர் வேலை நிறுத்த அறிவிப்பு காரணமாக, படப்பிடிப்புகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. சினிமா சார்ந்த இசை நிகழ்ச்சிகள், விளம்பர நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் சங்க போராட்டத்துக்கு பெப்ஸி அமைப்பும் ஆதரவு தெரிவிப்பதால், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையில்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். வெளிநாடு, வெளி மாநிலங்களில் நடந்து வரும் தமிழ் படங்களின் படப்பிடிப்பு வரும் 23ம் தேதியோடு நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் தேர்வு நடைபெற்று வருகிறது. இதனால் இந்த கால கட்டத்தில் புதிய படங்கள் குறைவாகவே வெளியாகும். தியேட்டர்களில் கூட்டம் குறைவாகவே இருக்கும். ஏப்ரல் மாதத்தின் மத்தியில் இருந்து பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்படும். அதற்குள் இந்த பிரச்னையைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என திரையுலகினர் அனைவரும் விரும்புகின்றனர்.

×Close
×Close