Advertisment

கதைக்கு தேவையான ஒளிப்பதிவையே செய்கிறேன் - ஒளிப்பதிவாளர் ஏ.ஆர்.சூர்யா நேர்காணல்

எல்லாரும் டிஜிட்டலுக்கு வந்திட்டாங்க. யார் வேணும்னாலும் கேமரா பண்ணலாம். இப்போ ப்ரேம்ல கான்ட்ராஸ்டை கலரை தீர்மானிக்கிறது கேமராமேன் இல்ல, கலரிஸ்ட்தான்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
A.R. Surya

பாபு

Advertisment

ஆதலால் காதல் செய்வீர், மாவீரன் கிட்டு படங்களின் ஒளிப்பதிவாளர் ஏ.ஆர்.சூர்யா. இவ்விரு படங்களின் கதைக்கேற்ற வர்ணங்களும், அனுபவமிக்க கேமரா கோணங்களும், நடுத்தர வயது கடந்த நபரையே எதிர்பார்க்க வைக்கும். ஆனால், சுறுசுறுப்பான கல்லூரி மாணவர் போலிருக்கிறார் சூர்யா. ஒளிப்பதிவு குறித்த ஆர்வமும், அது குறித்த அவரது பேச்சும் யாரையும் உற்சாகப்படுத்தக் கூடியவை. அனலடிக்கிற மதியத்தில் அவருடனான சந்திப்பு நடந்தது.

உங்களுடைய நிஜப்பெயர் இளையராஜான்னு கேள்விப்பட்டிருக்கிறேன். ஏ.ஆர்.சூர்யா என்று பெயர் மாற என்ன காரணம்?

நான் முதல்ல சினிமோட்டோகிராஃபி பண்ணுன படம் சுசீந்திரனின் ஆதலால் காதல் செய்வீர். அந்தப் படத்துக்கு இசை யுவன் சங்கர் ராஜா. யுவன் சங்கர் ராஜா, இளையராஜான்னு போட்டா இரண்டு பேரும் சேர்ந்து மியூசிக் பண்றதா குழப்பம் வரும். என்னோட ப்ரெண்ட்ஸ்லகூட இளையராஜான்னு பெயர் உள்ளவங்க இருக்காங்க. எதுக்கு குழப்பம்னு பெயரை மாத்திட்டேன். சூர்யாங்கிறதும் என்னோட பெயர்தான். வீட்ல அம்மா கூப்டறது.

சினிமோட்டோகிராஃபி மேல எப்படி ஆர்வம் வந்திச்சி?

எனக்கு அது பிடிச்சிருந்திச்சி. உதிரிப்பூக்கள் படத்துல அஞ்சு சிரிக்கிற ஒரு காட்சிவரும். குறிப்பிட்ட அந்த சீனை அசோக்குமார் சார் ரொம்ப பிரமாதமா படமாக்கியிருப்பார். அதே மாதிரி பாலுமகேந்திரா சார் படங்களில் அவரோட சினிமோட்டோகிராஃபி எனக்குப் பிடிக்கும். ரோஜா படத்துல சந்தோஷ்சிவனோட ஒளிப்பதிவை ரசிச்சு பார்த்திருக்கிறேன். இதெல்லாம் சேர்ந்து, டிகிரி முடிச்சப்புறம் என்ன பண்ணலாம்னு முடிவு பண்ணுனப்போ நான் சினிமோட்டோகிராஃபியை செலக்ட் பண்ணுனேன்.

அப்படியொரு முடிவு எடுத்ததும் என்ன பண்ணுனீங்க? யார்கிட்டயாவது அசிஸ்டெண்டா சேர்ந்தீங்களா?

இல்லை. முதல்ல ஸ்டில் போட்டோகிராஃபி பத்தி ஆறு மாச கோர்ஸ் படிச்சேன். எங்கிட்டயிருந்த எஃம்எம் 2 நிகான் கேமரால தினமும் போட்டோஸ் எடுத்தேன். போட்டோஸ் எடுக்காத நேரம் பிரிட்டீஷ் கவுன்சிலில் உள்ள லைப்ரரியில் போட்டோகிராஃபி பத்துன புத்தகங்கள் படிப்பேன். படிக்கிறது, போட்டோஸ் எடுக்கிறது. இதுதான் அப்போது என்னோட வேலையா இருந்திச்சி.

அந்த ஆரம்ப காலத்தில் உங்களை பாதிச்ச புத்தகம் எது?

நிறைய புத்தகங்கள் இருக்கு. குறிப்பா 100 டைப்ஸ் ஆஃப் கிரியேடிவ் போட்டோகிராஃபின்னு ஒரு புத்தகம். சின்ன புத்தகம்தான். ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொருவிதமான போட்டோகிராஃபி பத்தி இருக்கும். உதாரணமா அப்ஸ்ராக்ட் பத்தினா, அது மாதிரியான போட்டோஸ் இருக்கும். நான் ஒருநாள் முழுக்க அந்தவகை போட்டோஸை மட்டும் ட்ரை பண்ணுவேன். இப்படி ஒருநாள் ஒரு டைப்னு போட்டோஸ் எடுத்திருக்கேன்.

சினிமாவுக்குள் எப்படி வந்தீங்க?

தியாகராஜன் குமாரராஜாவோட எனக்கு அந்த நேரம் நட்பு இருந்திச்சி. அவரோட இரண்டு நண்பர்கள் மூலமா ஆசை ஆசையாய் படத்துல கேமராமேன் சேகர்கிட்ட அசிஸ்டெண்டா வேலை பார்த்தேன். அப்புறம் கேமராமேன் லக்ஷ்மண்கூட சில படங்கள். இவர்கிட்டதான் வொர்க் பண்ணணும்னு நான் விரும்பி தேடிப்போன கேமராமேன் பி.எஸ்.வினோத் சார். நான் எடுத்த போட்டோஸைப் பார்த்தவர், நல்லாயிருக்கு, மூணு மாசம் கழிச்சு போன் பண்றேன்னு சொன்னார். அதேபோல சரியா மூணு மாசம் கழிச்சு, ஷுட் இருக்கு வந்திடுன்னு போன் பண்ணுனார். என்னோட சினிமா அனுபவத்துல, மூணு மாசம் கழிச்சு போன் பண்றேன்னு சொல்லிட்டு சரியா அதே மாதிரி போன் பண்ணுன ஒரே ஆள் வினோத் சார் மட்டும்தான். அவர் லைட்டிங் பண்ணுனா மட்டும், இந்த ஷாட் ஸ்க்ரீன்ல எப்படி எந்த கான்ட்ராஸ்ட்ல வருங்கிறதை கரெக்டா சொல்லலாம். அவர் டிஐ ல பார்த்துக்கலாம்னு நினைக்கிறதில்லை. ஸ்பாட்லயே அந்த கான்ட்ராஸ்டை கொண்டு வந்திடுவார். அவர்கிட்ட நான் விளம்பரப் படங்களுக்கு வொர்க் பண்ணுனேன். அவர்கிட்டதான் அதிகம் கத்துகிட்டேன்.

ஆதலால் காதல் செய்வீர் வாய்ப்பு எப்படி கிடைச்சது?

சுசீந்திரனை வெண்ணிலா கபடிக்குழு டைமிலேயே தெரியும். அதுல நான் கேமரா அசிஸ்டெண்ட். அதுக்கப்புறமும் அவர்கூட எனக்கு தொடர்பு இருந்திச்சி. அவர் தன்னோட படத்தின் புரோகிரஸை என்னை கூப்டு சொல்வார். அழகர்சாமியின் குதிரை படத்தப்போ, செகண்ட் யூனிட் பண்றியான்னு கேட்டார். பண்ணுனா மொத்த படத்துக்கும் பண்றேன்னு சொன்னேன். சரி, நானே நல்ல வாய்ப்பு வரும்போது கூப்ட்றேன்னு சொன்னார். மலையாளத்துல கேமராமேன் பைசல்கிட்ட ஆர்டினரி படத்துல வொர்க் பண்ணிட்டிருந்தப்போ ஆதலால் காதல் செய்வீர் படத்துக்கு ஒளிப்பதிவு பண்ண கூப்டார்.

அந்தப் படத்தை நீங்க ஃபிலிம்ல ஷுட் பண்ணுனீங்க இல்லையா?

ஆமா. அப்போ எல்லாரும் டிஜிட்டலுக்கு மாறிட்டிருந்தாங்க. எங்கேப் பார்த்தாலும் ரெட் ஒன், அலெக்சாதான். சுசீந்திரனும் ரெட் ஒன்ல ஷுட் பண்ணலாங்கிற முடிவுலதான் இருந்தார். நான்தான், இது நல்ல கதை, இதுல வர்ற நுட்பமான ஃபீலிங்ஸை ஸ்கிரீன்ல கொண்டு வர்றதுன்னா கண்டிப்பா பிலிம்லதான் பண்ணணும்னு சொன்னேன். அவரும் புரிஞ்சுகிட்டு ஒத்துகிட்டார்.

ஃபிலிம்ல பண்ணுனதுக்கான வரவேற்பு எப்படி இருந்திச்சி?

ரொம்ப நல்ல ரெஸ்பான்ஸ். படத்தோட சாங் முடிஞ்சதும் அதை ரவி கே.சந்திரன் சார்கிட்ட காண்பிக்கணும்னு சுசீந்திரன் சொன்னார். டிஐ பண்றதுக்கு முன்னாடி அவர்கிட்ட அதை சுசீந்திரன் காமிச்சார். எக்ஸ்பீரியன்ஸ் கேமராமேன், என்ன சொல்வாரோன்னு நான் உள்ளே போகலை. பிறகு அவர் என்னை கூப்பிட்டு அனுப்பினார். என்னை பார்த்த உடனே அவர் கேட்டது, எந்த ஸ்டாக்ல எடுத்தேங்கிறதுதான். எனக்கு ரொம்ப திருப்தியா இருந்திச்சி. எதுவும் கேட்காமலே சீனைப் பார்த்தே அது ஃபிலிம்ல எடுத்ததுன்னு கண்டுபிடிச்சிட்டார். கொடாக் 200 லன்னு சொன்னேன். அதுல அந்தளவு டெப்த் கொண்டு வர்றது கஷ்டம். ரொம்ப மெச்சூர்டா நல்லா இருக்குன்னு பாராட்டினார்.

மாவீரன் கிட்டு அனுபவம் எப்படி இருந்திச்சி?

ஆதலால் காதல் செய்வீர் படத்துக்கு அப்படியே நேர்மாறா இருந்திச்சி. ஷுட்டிங் நடந்த 40 நாள்ல 25 நாள் ஒரு சிங்கிள் லைட்கூட இல்லாம ஷுட் பண்ணுனோம். ஏன்னா, ஷுட்டிங் நடந்த இடத்துக்கு கேமராவை கையில தூக்கிட்டுப் போகலாம். லைட்டெல்லாம் எடுத்துப்போக முடியாது. காலையில் ஏழு மணிக்கு ஷுட்டிங் ஆரம்பிச்சா. சாயங்காலம் நாலுமணிவரைதான் எடுக்க முடியும். மழை வந்திடும். காட்டுப்பகுதின்னால சீக்கிரம் இருட்டிரும். படத்தைப் பார்த்தவங்க, நல்லா லைட்டிங் பண்ணியிருந்ததா சொன்னாங்க. ஆனா, லைட்டே இல்லாம அவையிலபிள் லைட்ல எடுத்ததுதான் மாவீரன் கிட்டு.

நேச்சுரல் லைட்டிங்கிற விஷயம் இங்க பிரபலமாயிருக்கே?

நேச்சுரல் லைட்டிங்னு சொன்னா, லைட் பண்ணாம அவையிலபிள் லைட்ல ஷுட் பண்றதுன்னு நினைச்சுகிட்டிருக்காங்க. ஆனா, அது தப்பு. பிரேவ்ஹார்ட் மாதிரியான வெளிநாட்டுப் படங்களைப் பார்க்கிறப்போ, இயற்கையான ஒளியை கொண்டு வர்றதுக்கு அவங்க எந்தளவு லைட்டிங் பண்றாங்கங்கிறதை தெரிஞ்சுக்க முடியும்.

ஒருகாலத்தில் ஒரு பிரேமைப் பார்த்தே இது பி.சி.ஸ்ரீராம், இது பாலுமகேந்திரா, இது ஜீவான்னு சொல்ல முடிஞ்சது. ஆனா இப்போ அப்படியில்லையே? கதையை மீறி தங்களின் தனித்துவத்தை ஒளிப்பதிவாளர்கள் காட்டுவது நின்னு போச்சா இல்லை திறமையான ஒளிப்பதிவாளர்கள் இல்லையா?

நீங்க சொன்னவங்க எல்லாருமே ஃபிலிமில் வொர்க் பண்ணுனவங்க. ஒவ்வொரு வரோட வொர்க்கிங் ஸ்டைலும், லைட்டிங்கும் வேற. ஆனா, இன்னைக்கு எல்லாரும் டிஜிட்டலுக்கு வந்திட்டாங்க. யார் வேணும்னாலும் கேமரா பண்ணலாம். இப்போ ப்ரேம்ல கான்ட்ராஸ்டை கலரை தீர்மானிக்கிறது கேமராமேன் இல்ல, கலரிஸ்ட்தான். இதனாலதான் உங்களால வித்தியாசத்தை கண்டுபிடிக்க முடியலை. ஆனா, இப்போதும் நீரவ் ஷா மாதிரி தனியா தெரியக் கூடியவங்க இருக்காங்க. அவங்க யாருன்னு பார்த்தா ஃபிலிம்ல வொர்க் பண்ணுனவங்களா இருப்பாங்க. 2005 இல் மது அம்பட் சாருக்கு சிருங்காரம் படத்துக்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான நேஷனல் அவார்ட் கிடைச்சது. இவ்வளவு திறமைசாலிகள் இருந்தும் அடுத்த பத்து வருஷம் தமிழுக்கு கிடைக்கலை. போன வருஷம் திரு சாருக்கு கிடைச்சது. அவரும் ஃபிலிம்ல வொர்க் பண்ணுனவர். இது ஏன்னு யோசிக்க வேண்டிய விஷயம்.

உங்களோட வொர்க்கிங் ஸ்டைல் என்ன?

அதை கதைதான் தீர்மானிக்கும். கதையோட பீலிங்குக்கு ஏத்தபடிதான் கலர்ஸையும், லைட்டிங்கையும் தீர்மானிப்பேன். டிஐ ல பார்த்துக்கலாம்னு நான் நினைக்கிறதேயில்லை. ஒரு ஷாட்ல என்ன டெப்த், கான்ட்ராஸ் வேணும்னு நினைக்கிறேனோ அதை ஸ்பாட்ல லைட்டிங்லயே கொண்டு வர முயற்சி பண்ணுவேன். டிஐ ல பார்த்துக்கலாம்னு நினைக்க மாட்டேன். கதைக்கு தேவையான ஒளிப்பதிவையே செய்கிறேன்.

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment