Advertisment

‘கோப்ரா’ விமர்சனம்: பாதி பிரம்மாண்டம்… எதிர்பார்ப்பு இல்லாமல் சென்றால் மகிழ்ச்சி அடையலாம்

Cobra movie review: அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே இன்று வெளிவந்திருக்கும் கோப்ரா திரைப்படம் எப்படி இருக்கிறது என்று முதல் பார்வையில் காண்போம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Cobra movie review, chiyaan vikram, cobra movie cast, cobra tamil movie release, cobra tamil movie, கோப்ரா, விக்ரம், சீயான் விக்ரம், கோப்ரா திரைவிமர்சனம், கோப்ரா, cobra, cobra tamil movie budget, cobra cast, cobra movie ticket booking, cobra film, virkam, actor vikram, ar rahman

Cobra movie review: அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே இன்று வெளிவந்திருக்கும் கோப்ரா திரைப்படம் எப்படி இருக்கிறது என்று முதல் பார்வையில் காண்போம்.

Advertisment

கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தயாராகி வந்து இறுதியாக இன்று திரைப்படம் வெளிவந்திருக்கிறது. இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் கொடுத்த எதிர்பார்ப்பை முதல் பாதியிலேயே இயக்குனர் கொடுத்து விடுகிறார். இப்படத்திற்கு மிகப்பெரிய பலம் சியான் விக்ரம் அவர்களின் மிரட்டலான நடிப்பு. பல கேரக்டரில் வந்தாலும் ஒவ்வொரு கேரக்டருக்கும் தனித்தனியாக அவர் மெனக்கெட்டிருப்பது திரையில் நன்றாக தெரிகிறது. ஒவ்வொரு கேரக்டருக்கும் அவர் கொடுத்திருக்கும் வித்தியாசமான குரல்கள் மற்றும் உடல் மொழி மூலம் தான் ஒரு தேர்ந்த நடிகர் மட்டுமல்லாது சிறந்த கலைஞனாகவும் தன்னை மீண்டும் நிரூபித்துள்ளார்.

‘ஒன் மேன் ஷோ’ என்பது போல படத்தின் முதல் பாதி முழுவதையும் தன் முதுகில் சுமந்து இருக்கிறார் விக்ரம். அதில் வெற்றியும் பெற்று இருக்கிறார். படத்தின் இரண்டாம் பாகம் தான் படத்தின் மிகப்பெரிய பலவீனமாக கருதப்படுகிறது. முதல் பாதியில் இருந்து இடைவேளை வரை அவர்கள் காட்டிய பிரம்மாண்டமும் திரைக்கதையும் இரண்டாம் பாதியில் தொய்வடைவது மிகப் பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், இடைவேளையில் வரும் ‘டுவிஸ்ட்’ அனைவரையும் இரண்டாம் பாதிக்கு மிக விறுவிறுப்பாகவும் மிக எதிர்பார்ப்புடனும் உட்கார வைக்கிறது. ஆனால், படத்தின் நீளமும், இரண்டாம் பாதியில் கதைக்களமும் பலவீனமாக உள்ளதை மறுக்கமுடியாது. ஏ.ஆர் ரஹ்மானின் பின்னனி இசை, பாடல்கள் எல்லாமே ரசிக்கும் விதமாக உள்ளது. முதல் பாதியில் வரும் பின்னணி இசை எல்லாம் மிகவும் பிரமாதம். ‘அதிரா’ பாடல் இசை புத்துணர்ச்சியின் உச்சம்.

நாயகிகளாக வரும் ஸ்ரீநிதி, மிர்னாலினி, மீனாட்சி ஆகியோர் கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். விக்ரம்-ஸ்ரீநிதி இடையிலான காதல் காட்சிகள் நம் பொறுமையை மிகவும் சோதிக்கின்றன. இரண்டாம் பாதியில் வரும் கதைக்களம், பிளாஷ் பேக் முதலியவை முதல் பாகத்திற்கும் சம்பந்தமே இல்லாமல் இருப்பதால் திரைக்களம் மெதுவாக நகர்கிறது. வில்லனாக வரும் மலையாள நடிகர் ரோஷன் தனது துள்ளலான நடிப்பால் அனைவரையும் ரசிக்க வைக்கிறார். அவருக்கு தமிழ் திரை உலகில் இன்னும் நிறைய வாய்ப்புகள் வரும் என்று நம்பலாம்.

கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் முதன்முதலாக பெரிய திரையில் தோன்றுகிறார். சில இடங்களில் அவருடைய டப்பிங் சரியாக பொருந்தவில்லை என்றாலும் அவரின் நடிப்பு சூப்பர். இரண்டாம் பாதியில் வரும் இன்ட்ரோகேஷன் சீனில் விக்ரமின் நடிப்பு அந்நியன் படத்தை நமக்கு நினைவூட்டினாலும் அதை மேலும் மேலும் ரசிக்க தோன்றுகிறது. ஹரிஷ் கண்ணன் அவர்களுடைய ஒளிப்பதிவு முதல் பாதியில் மிகவும் பிரம்மாண்டமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பது மேலும் படத்தை ரசிக்க உதவுகிறது. அவர் வெளிநாடுகளை காட்டி இருக்கும் விதமும் அழகும் நம்மை அந்த இடத்திற்கே கொண்டு செல்கிறது.

இப்படி பல ஏற்ற, இறக்கங்கள் நிறைந்ததாக படத்தின் திரைக்கதை அமைந்திருந்த போதிலும் சியானின் மிரட்டலான நடிப்பும், இசைபுயலின் மெர்சலான இசையும் ஒரு நல்ல படத்தை பார்த்த திருப்தியை கொடுக்கிறது. இரண்டாம் பாதியின் நீளத்தை குறைத்தால் படம் இன்னும் மெருகேறும் என்பது உறுதி.

படத்தின் முதல் பாதி ரசிகர்களுக்கு ஏற்படுத்திய பிரம்மாண்டத்தையும், பரபரப்பையும், எதிர்பார்ப்பையும், இரண்டாம் பாகம் பூர்த்தி செய்யத் தவறியதால் இப்படம் ஒரு சிறப்பான தரமான படம் என்ற இடத்திலிருந்து சற்று கீழ் இறங்கி ஒரு சாதாரண படமாக, படம் முடிந்து வெளியில் வரும் ரசிகர்கள் மனதில் நிற்கிறது. மொத்தத்தில், ‘கோப்ரா’விற்கு ஓவரான எதிர்பார்ப்பு இல்லாமல் சென்றால் மகிழலாம்.

நவீன் சரவணன்

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vikram Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment