செப்டம்பர் 25ம் தேதி பாடும் வானம்பாடியான பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மரணம் அடைந்தார். 74 வயதில் அவர் இவ்வுலகை விட்டு நீங்கினாலும் அவருடைய இசை என்றும் எங்கும் நிறைந்திருக்கும் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. ரசிகர்கள், கலைத்துறையினர், திரையுலகினர் அவருக்கு தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் 10ம் தேதி அன்று கோவை பேரூர் செட்டிப்பாளையம் பகுதியில் அவருக்கு வன அஞ்சலி நிகழ்த்தப்பட்டது. சிறுதுளி அமைப்பினர் பாலசுப்பிரமணியத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 75 மரக்கன்றுகளை நட்டு வைத்துள்ளனர். இந்த விழாவில் நடிகர் விவேக், கிணத்துக்கடவு எம்.எல்.ஏ எட்டிமடை சண்முகம், சிறுதுளி அமைப்பின் நிர்வாக இயக்குநர் வனிதா மோகன் ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும் படிக்க : கோவையில் பறவைகள், பட்டாம்பூச்சிகள் சர்வே நாளை துவக்கம்!
எஸ்.பி.பியின் மகன் சரண் மற்றும் சகோதரி ஷைலஜா ஆகியோர் காணொளி மூலமாக இந்த நிகழ்வில் பங்கேற்றனர். 1.8 ஏக்கர் நிலத்தில் அமைய இருக்கும் இந்த வனத்தில் மொத்தம் 74 மரங்கள் நடப்பட்டுள்ளது. இவை அனைத்தும் இசைக்கருவிகள் அமைக்க பயன்படும் மரங்களின் கன்றுகளாகும். இசைத்துறையில் அதிகம் பயன்படுத்தப்படும் குறியீடான ட்ரெப்ள் க்ளெஃப் வடிவமைக்கப்பட்டு அதில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. உள்ளூர் மக்கள் இந்த வனத்தை பாதுகாக்க முடிவு செய்துள்ளனர். மேலும் இங்கு குழந்தைகள் விளையாடுவதற்கும், வாசிப்பதற்கு நூலகமும் இங்கு அமைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil