கோவை மாநகரின் அருகில் அமைந்துள்ள பேரூர் பட்டீஸ்வரர் கோவில், தமிழகத்தின் மிகத் தொன்மையான மற்றும் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றாகும்.
கி.பி. 2ஆம் நூற்றாண்டில் மாமன்னன் கரிகால சோழனால் கட்டப்பட்டதாகக் கருதப்படும் பேரூர் பட்டீஸ்வரர் ஆலயம், அதன் வரலாற்றுச் சிறப்புக்குச் சான்றாக விளங்குகிறது. சைவ சமயத்தின் முக்கிய அடியார்களான அருணகிரிநாதர் மற்றும் கச்சப்ப முனிவர் போன்றோரால் பாடப்பட்ட பெருமை இக்கோவிலுக்கு உண்டு. இங்குள்ள சிற்பங்கள், கல்வெட்டுகள் மற்றும் கட்டிடக்கலை அம்சங்கள் சோழர் கால கலை நுணுக்கத்தைப் பறைசாற்றுகின்றன. இக்கோவிலின் பிரதான தெய்வங்களான பட்டீஸ்வரரும் (சிவன்) மற்றும் பச்சை நாயகி அம்மனும், பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
அண்மையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேவாக் இங்கு வந்து சாமி தரிசனம் செய்தார். மேலும், நடிகர் சூர்யா, நகைச்சுவை நடிகர் யோகி பாபு போன்ற திரைப் பிரபலங்களும் இக்கோவிலின் வரலாற்றுச் சிறப்பம்சங்களை அறிந்து, பக்தி சிரத்தையுடன் இங்கு வந்து தரிசித்துச் செல்கின்றனர்.
இந்த வரிசையில், நடிகை சினேகா தனது குடும்பத்துடன் பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
சினேகா, பிரசன்னா மற்றும் அவர்களது மகனைக் கண்ட பக்தர்கள், அவர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து பட்டீஸ்வரர் மற்றும் பச்சை நாயகி அம்மனை வணங்கி வழிபடுவது குறிப்பிடத்தக்கது.