Jayam Ravi's Comali Review: நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள திரைப்படம் ‘கோமாளி’. இதனை அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ளார். காஜல் அகர்வால், கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் சம்யுக்தா ஹெக்டே முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
’கோமாளி’ படத்தின் கதைகளம் என்னவென்றால், நெருங்கிய நண்பர்களான ஜெயம் ரவியும், யோகி பாபுவும் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்கள். அதே பள்ளியில் சேரும் சம்யுக்தாவை பார்த்ததும் ஜெயம் ரவிக்கு பிடித்துப் போகிறது. அவரிடம் 1999-ம் ஆண்டு, டிசம்பர் 31-ம் தேதி காதலை சொல்லச் செல்கிறார் ரவி.
அப்போது ரவுடியாக இருக்கும் கே.எஸ்.ரவிகுமாரால் ஜெயம் ரவிக்கு ஒரு விபத்து ஏற்படுகிறது. இதில் கோமா நிலைக்கு செல்லும் ஜெயம் ரவி, 16 வருடங்களுக்குப் பிறகு அதிலிருந்து மீள்கிறார். கோமாவில் இருந்து மீண்ட ஜெயம் ரவி அனைத்து விஷயங்களிலும் 16 வருடம் பின் தங்கி இருக்கிறார். இதனால் அவர் சந்திக்கும் பிரச்னைகளை ஜாலியாக காட்டியிருக்கும் படம் தான் ‘கோமாளி’.
90’ஸ் கிட்ஸ் ரசித்த பல விஷயங்களை தேடி அலையும் காட்சிகளில் ஒவ்வொரு 90’ஸ் கிட்ஸையும் உணர்ச்சி பொங்க வைத்திருக்கிறார் ஜெயம் ரவி. 90’ஸ் கிட்ஸ் Vs 2k கிட்ஸின் லைஃப் ஸ்டைலில் இருக்கும் மாற்றங்களையும், இடைவெளியையும் சரியாகக் காட்டியிருக்கிறார் இயக்குநர். ஜெயம் ரவி - யோகி பாபு கூட்டணியின் காமெடிகள் திரையரங்கில் சிரிப்புப் பட்டாசாக வெடிக்கின்றன. காஜல் அகர்வால் - சம்யுக்தா ஹெக்டே வழக்கம்போல் அழகு பொம்மைகளாக ஜொலிக்கிறார்கள். கே.எஸ்.ரவிக்குமாரின் அனுபவம் அவருடைய நடிப்பில் தெரிகிறது.
ரிச்சர்டின் ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது. பின்னணி இசையைப் போல் பாடல்களிலும் கவனம் செலுத்தியிருக்கலாம் ஹிப் ஹாப் ஆதி!