கோமாளி பட டிரைலரில் ரஜினியின் அரசியல் வருகை குறித்த கருத்துக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு, கே.எஸ்.ரவிக்குமார், சம்யுக்தா ஹெக்டே ஆகியோர் நடித்துள்ள கோமாளி படத்தின் டிரைலர் நேற்று (ஆக.3) வெளியிடப்பட்டது.
மேலும் படிக்க : ரஜினியை கலாய்த்தது ஏன்? - கோமாளி பட இயக்குனர் பிரதீப் விளக்கம், ஏற்காத ரசிகர்கள்!
கதைப்படி கோமாவில் விழும் நாயகன் ஜெயம் ரவி, 16 ஆண்டுகள் கழித்து 2016ல் தான் கண் விழிக்கிறார். ஆனால், தான் கோமாவில் விழுந்ததை, நண்பர் யோகி பாபு எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் நம்ப மறுக்கிறார் நாயகன். இதனால், நண்பனை நம்ப வைக்க, யோகிபாபு டிவியை ஆன் செய்ய, அதில், நடிகர் ரஜினிகாந்த், ‘நான் அரசியலுக்கு வருவது உறுதி’ என்கிறார். அதைப் பார்க்கும் ஜெயம் ரவி, ‘இது 1996ல் சொன்னது’ என்று பதில் அளிக்கிறார்.
இக்காட்சிக்கு ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "நம்மவர் அவர்கள் இன்று காலை கோமாளி ட்ரைலர் பார்த்தார். அதில் ரஜினி அவர்கள் அரசியலுக்கு வருவதை பற்றிய விமர்சனத்தை பார்த்தவர் உடனே தயாரிப்பாளருக்கு போன் செய்து இதை என்னால் நகைச்சுவையாக பார்க்க முடியவில்லை என்று கூறி வருத்தப்பட்டார். நட்பின் வெளிப்பாடா நியாயத்தின் குரலா" என்று குறிப்பிட்டுள்ளார்.