பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு, கே.எஸ்.ரவிக்குமார், சம்யுக்தா ஹெக்டே ஆகியோர் நடித்துள்ள கோமாளி படத்தின் டிரைலர் நேற்று (ஆக.3) வெளியிடப்பட்டது.
இதில், ரஜினிகாந்தின் அரசியல் வருகையை கிண்டல் செய்யும் வகையில் காட்சி அமைக்கப்பட்டதாக அவரது ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. சமூக தளங்களில் ரசிகர்கள் தங்கள் எதிர்ப்பு குரல்களை பதிவு செய்தனர். எல்லாவற்றிற்கும் மேல், கமல்ஹாசன் கோமாளி படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷை தொலைபேசியில் அழைத்து, 'ரஜினியின் அரசியல் வருகையை கிண்டல் செய்திருப்பதை காமெடியாக பார்க்க முடியவில்லை' என வருத்தம் தெரிவிக்க, விவகாரம் பெரிதானது.
விளைவு, படத்தின் நாயகன் ஜெயம் ரவி தன்னிலை விளக்கம் அளித்து நீண்ட அளிக்க வெளியிட, இயக்குனரும், தயாரிப்பாளரும் ஒரு படி மேல் போய், படத்தின் காட்சியை நீக்குவதோடு மட்டுமல்லாமல், ரஜினியை பெருமைப்படுத்தும் விதமாக காட்சியை மாற்றப்போவதாகவும் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து இயக்குனர் பிரதீப்பும், தயாரிப்பாளர் ஐசரி கணேஷும் கூட்டாக இணைந்து வெளியிட்டுள்ள வீடியோவில் பேசிய ஐசரி கணேஷ், "கமல்ஹாசன் எனக்கு போன் செய்து வருத்தம் தெரிவித்தார். அப்போது அவரிடமே அக்காட்சியை நீக்குவதாக உறுதி அளித்தேன். மேலும் சில ரசிகர்களும் வேதனைப்பட்டதாக தெரிய வந்தது. இதனால், இக்காட்சியை நீக்க முடிவு செய்துள்ளோம்" என்றார்.
இயக்குனர் பிரதீப் பேசுகையில், "குறிப்பிட்ட அந்த காட்சியை நீக்கி, ரஜினி சாரை பெருமைப்படுத்தும் வகையில் காட்சி அமைக்க இருக்கிறோம்" என்று தெரிவித்திருக்கிறார்.
ஹீரோ ஜெயம் ரவி வெளியிட்ட பதிவில், "முழுக்க முழுக்க காமெடியை மையப்படுத்தியே அக்காட்சி அமைக்கப்பட்டது. ரஜினி சாரின் நடிப்பு, ஸ்டைல் பார்த்து வளர்ந்தவன் நான். அவரது அரசியல் வருகையை மற்ற ரசிகர்களை விட, அதிகம் எதிர்பார்ப்பவன் நான் தான். சில ரசிகர்கள் அந்த காட்சியை விரும்பவில்லை என்று தெரியவந்தது. இதனால், அக்காட்சியை படத்தில் இருந்து நீக்குகிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.