Complaint filed against Vijay TV Bakiyalakshmi serial for controversial promo: ‘பாக்யலட்சுமி’ சீரியலின் ப்ரோமோவிற்கு எதிராக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் முன்னனி சீரியல்களுள் ஒன்று பாக்யலட்சுமி. ஒரு இல்லத்தரசி சந்திக்கும் சவால்களை மையமாகக் கொண்டு இந்த சீரியல் ஒளிப்பரப்பாகி வருகிறது.
இந்தநிலையில், இந்த சீரியலின் சமீபத்திய ப்ரோமோ சர்ச்சையாகியுள்ளது. வெளியிடப்பட்ட குறிப்பிட்ட ப்ரோமோவில், ஆசிரியரின் பாலியல் துன்புறுத்தல் காரணமாக பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் வகையில் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
இதனையடுத்து முகமது கோஷ் என்பவர் சீரியல் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், குறிப்பிட்ட காட்சியை நீக்க வேண்டும் என்றும், இது போன்ற காட்சிகளை தொலைக்காட்சியில் ஒளிபரப்பினால் அது மற்றவர்களுக்கு தவறான முன்னுதாரணமாக அமையும் என்றும் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், இது தொடர்பான ப்ரோமோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதாகவும், குறிப்பிட்ட காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் புகார்தாரர் கூறினார்.
இது குறித்து முகமது கோஷ் கூறுகையில், பொதுவாகவே தற்கொலை என்பது தவறான ஒன்று. அதிலும் பள்ளி படிக்கும் மாணவர்கள் தற்கொலை செய்வது மிக மிக தவறு. எந்த ஒரு பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வாகாது. இதை நாம் பிள்ளைகளுக்கு வலியுறுத்தி சொல்ல வேண்டும். அதுமட்டுமில்லாமல் இதுபோன்று நடக்கும் பாலியல் கொடுமைகளை பற்றி தைரியமாக பெற்றோர்களிடமும் சொல்லவில்லை என்றால் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கலாம் என்று பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுத்து இருக்கோம். இந்த சூழலில் பாலியல் தொல்லை காரணமாக ஒரு பெண் தற்கொலை செய்துகொள்வதாக சீரியலில் காட்டியிருக்கிறார்கள். இது மிகவும் முட்டாள்தனமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.
சமீபத்திய அறிக்கைகளின்படி, புகார் குறித்து உடனடி நடவடிக்கைக்காக TRAI மற்றும் IB அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன், 'கல்யாண வீடு' சீரியலில், பெண் ஒருவரை கூட்டு பலாத்காரம் செய்வது போன்ற காட்சி ஒளிபரப்பப்பட்டதற்கு எதிராக, இதே போன்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது. சர்ச்சைக்குரிய காட்சியைக் காட்சிப்படுத்தியதற்காக தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனரைக் கண்டித்த நீதிமன்றம், மன்னிப்பு கேட்கும்படி உத்தரவிட்டது.
தற்போது பாக்யலட்சுமி சீரியல் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட டிவி சேனலோ அல்லது சீரியல் தயாரிப்பாளர்களோ இதுவரை பதிலளிக்கவில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”