எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலைத் தழுவி இயக்குநர் மணிரத்னம் அதே பெயரில் 2 பாகங்களாக படம் இயக்கினார். முன்னணி நட்சத்திரங்கள் ஐஸ்வர்யா ராய், விக்ரம், ஜெயம் ரவி, பிரகாஷ் ராஜ், கார்த்தி, த்ரிஷா என ஏராளமானோர் இதில் நடித்துள்ளனர். முதல் பாகம் கடந்தாண்டு செப்டம்பரில் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றது. வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. இதில் நடித்துள்ள நடிகர்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து, பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் வரும் ஏப்ரல் 28-ம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில், வரலாற்றை திரித்து பொன்னியின் செல்வன் படம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறி இயக்குநர் மணிரத்னம் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலைத் தழுவி அதே பெயரில் இயக்குநர் மணிரத்னம் படம் இயக்கியுள்ளார். அதில் வரலாற்றை திரித்து படம் இயக்கப்பட்டுள்ளது.

முக்கிய கதாபாத்திரமான வந்தியத்தேவன் பெயரைத் தவறாக பயன்படுத்தியதுடன், தனது சுய லாபத்திற்காக வரலாற்றை தவறாக பயன்படுத்தியுள்ளார். வரலாற்றின் அடிப்படையில் படம் எடுக்கும் முன்பு உரிய ஆராய்ச்சி மேற்கொண்டிருக்க வேண்டும். வரலாற்றில் உள்ள உண்மை பெயர்களை கல்கியும் பயன்படுத்தி உள்ள நிலையில், போர் தந்திரங்களில் சிறந்து விளங்கிய சோழர்களுக்கு அவமதிப்பு ஏற்படுத்தும் வகையில் இயக்குநர் மணிரத்னம் வரலாற்றை திரித்துக் கூறியுள்ளார்.
மத்திய அரசு மற்றும் இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை ஆகியவற்றிடம் அளித்த புகார்களின் மீது நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கூறியுள்ளார். இந்த மனு நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“