இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஏ.ஆர்.ரஹ்மான், இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறியது ஏன் என்பது குறித்து பல தகவல்கள் வெளியாகி இருந்தாலும், சமீபத்தில் அவரது அக்காவும், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் அம்மாவுமான ஏ.ஆர்.ரைஹானா அளித்துள்ள பேட்டி கவனம் ஈர்த்துள்ளது.
கடந்த 1992-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர்.ரஹ்மான். முதல் படத்திலேயே தனது இசையால் பலரின் கவனத்தை ஈர்த்த இவருக்கு, தேசிய விருதும் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து, இந்தியன், ஜென்டில்மேன் என இயக்குனர் ஷங்கரின் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். 90-களின் இறுதியில் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கியவர் ஏ.ஆர்.ரஹ்மான்,
தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் ஹாலிவுட் சினிமாவில் ஸ்லாம்டாக் மில்லியனர் படத்தின் மூலம் அறிமுகமான ஏ.ஆர்.ரஹ்மான், முதல் படத்திலேயே ஆஸ்கார் விருது வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்தார். சமீபத்தில் வெளியான மாரி செல்வராஜின் மாமன்னன் திரைப்படம் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைக்கு பாராட்டுக்களை பெற்று கொடுத்தது. அடுத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியாக உள்ள லால் சலாம் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்த படம் விரைவில், வெளியாக உள்ளது.
திலீப் குமார் என்ற இயற்பெயர் கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான், தனது தந்தை உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தபோது, தர்ஹாவுக்கு சென்று வேண்டிக்கொண்டதால், அவர் உடல்நலம் தேறி சில ஆண்டுகள் வாழ்ந்ததாகவும், இதனால் திலீப் குமார் இஸ்லாமிய மதத்திற்கு மாறி தனது பெயரை ஏ,ஆர்.ரஹ்மான் என்று மாற்றிக்கொண்டதாக தகவல் வெளியானது. மேலும் ரஹ்மான் குடும்பபே இஸ்லாமிய மதத்தை பின்பற்றும் வகையில் அனைவரும் மதம் மறினர்.
இதனிடையே ஏ.ஆர்.ரஹ்மான் மதம் மாறியது குறித்து அவரது சகோரியும், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் அம்மாவுமான ஏ,ஆர்.ரைஹானா சமீபத்தில் ஒரு பேட்டியில், எனது தந்தை சேகர் உடல்நலக்குறைவால் இறந்தபிறகு நாங்கள் பல கஷ்டங்களை அனுபவித்தோம். அந்த நேரத்தில் எனது அம்மா சுஃபிஸத்தால் ஈர்க்கப்பட்டு, முழு குடும்பமும் மதம் மாறினோம். எல்லா சம்பிரதாயங்களையும் பின்பற்றி 5 முறை நமாஸ் செய்யும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள எனக்கு 10 வருடங்கள் ஆனது. தம மாற்றத்தால் எனது பெயரையும் மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது.
அப்போது நான் ஷனாஸ் என்ற பெயரை வைத்துக்கொள்ளலாம் என்று நினைத்தேன். ஆனால் ரைஹானா பெயர் பிடித்திருந்ததால் அதையே வைத்துக்கொண்டேன். எனது அப்பா என்னுடனே இருக்க வேண்டும் என்று நான் விரும்பியதால், எனது பெயரை ரைஹானா சேகர் என்று மாற்றினேன். ஆனால் ஏ.ஆர்.ரைஹானாவாக நான் இருக்க வேண்டும் என்று இசைத்துறை விரும்பிதால் அப்படி மாற்றிக்கொண்டேன். ஏ.ஆர், என்றால், அல்லா ரஹா என்று கடவுளின் பெயரை குறிக்கும் என்று ஏ.ஆர்.ரஹ்மான் சொன்னதாக ரைஹானா தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“