'நான் தான் அஜித்துக்கு இசையமைக்கிறேன்' - டி.இமான் அறிவிப்பு

இமான் இன்று தனது பேஸ்புக் பக்கத்தில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளார்

அஜித் – சிவா கூட்டணியில் நான்காவது முறையாக உருவாக இருக்கும் படம் ‘விசுவாசம்’. இந்தப் படத்தை, ‘விவேகம்’ படத்தைத் தயாரித்த சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். அஜித் – நயன்தாரா இணைந்து நடிக்கும் நான்காவது படம் இது.

‘விசுவாசம்’ படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பதாக முதலில் கூறப்பட்டது. ஆனால், அதன்பிறகு ‘விக்ரம் வேதா’ படத்துக்கு இசையமைத்த சாம் சி.எஸ். இசையமைப்பதாகச் சொன்னார்கள். அதற்கடுத்து, அஜித்தின் ‘வேதாளம்’ மற்றும் ‘விவேகம்’ படங்களுக்கு இசையமைத்த அனிருத்தே மூன்றாவது முறையாக இசையமைக்கப் போகிறார் என்றனர்.

இந்நிலையில், டி.இமான் ‘விசுவாசம்’ படத்துக்கு இசையமைக்க இருப்பதாக கடந்த வாரம் செய்திகள் வெளியானது. சத்யஜோதி ஃபிலிம்ஸ் அவருக்கு அட்வான்ஸ் கொடுத்துவிட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், இமான் இன்று தனது பேஸ்புக் பக்கத்தில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், “விசுவாசம் படத்திற்கு நான் தான் இசையமைக்கிறேன். உங்களின் ஆசிர்வாதத்துடன் சிறந்த இசையை வெளிப்படுத்துவேன். சிவா அவர்களுக்கும், சத்யஜோதி ஃபிலிம்ஸ்க்கும் எனது நன்றிகள்” என பதிவிட்டுள்ளார்.

×Close
×Close