இளையராஜாவின் இசையில் உருவான பாடல்களுக்கு மயங்காத ஆளே இருக்க முடியாது. இன்றைய காலகட்டத்திலும் அவரது பழைய பாடல்களை பயன்படுத்தி தான் புதுப்படங்களே கல்லாகட்டி வருகின்றன. சந்தோஷம், சோகம், ரொமான்ஸ், காதல் என அனைத்து விதமான எமோஷன்களுக்கும் ஏற்றபடி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்து உள்ளார்.
ரஜினி, கமல் படங்களுக்கு தான் அவர் அதிகளவில் இசையமைத்துள்ளார். அப்படி சூப்பர்ஸ்டார் ரஜினிக்காக இளையராஜா விசிலடித்தே உருவாக்கிய ஒரு மாஸ்டர் பீஸ் பாடல் பற்றி பார்க்கலாம்.
ராஜசேகர் இயக்கத்தில் கடந்த 1984-ம் ஆண்டு உருவான திரைப்படம் தம்பிக்கு எந்த ஊரு. இப்படத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக மாதவி நடித்திருந்த இப்படத்தில், வினு சக்ரவர்த்தி, சுலோச்சனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இப்படத்தை பஞ்சு அருணாச்சலம் தயாரித்து இருந்தார். இசைஞானி இளையராஜா தான் இப்படத்திற்கும் இசையமைத்து இருந்தார். இப்படம் எடுக்கப்பட்டபோது, அதன் அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்டுவிட்ட நிலையில், ஒரே ஒரு பாடல் காட்சிக்கான ஷூட்டிங் மட்டும் எஞ்சி இருந்ததாம். பாட்டு ரெடியாகாததால் அதற்காக ரஜினிகாந்த் உள்ளிட்ட படக்குழுவினர் காத்திருந்தார்களாம்.
ஆனால் அந்த சமயத்தில் இளையராஜாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு ஆபரேஷனும் நடைபெற்றதாம். ஆபரேஷனுக்கு முடிந்த பின்னர் அவரை ஓய்வெடுக்க அறிவுறுத்திய மருத்துவர்கள், பாடல் பாடக்கூடாது எனவும் கூறி இருந்தார்களாம்.
அந்த சமயத்தில் இளையராஜாவை பார்க்க வந்த பஞ்சு அருணாச்சலம், அவரிடம் நலம் விசாரித்துவிட்டு, அவரின் பாடலுக்காக ரஜினிகாந்த் உள்ளிட்ட படக்குழுவினர் காத்திருக்கும் விஷயத்தை கூறி உள்ளார். இதைக்கேட்ட இளையராஜாவுக்கு டக்குனு ஒரு ஐடியா வந்துள்ளது.
என்னால் பாட முடியாது, அதனால் நான் விசிலடித்து ட்யூன் போடுகிறேன், நீங்கள் அதற்கு பாடல் வரிகளை எழுதுறீங்களா என கேட்டிருக்கிறார். இதற்கு பஞ்சு அருணாச்சலமும் ஓகே சொல்லிவிட. இளையராஜா விசில் அடித்தே ட்யூன் போட்டிருக்கிறார்.
அந்தப் பாடல் தான் 1980-களில் காதல் கீதமாக இருந்தது. தம்பிக்கு எந்த ஊரு படத்தில் இடம்பெற்று சூப்பர் ஹிட் ஆன ‘காதலின் தீபம் ஒன்று’ பாடல் தான் அது. இளையராஜாவின் இசையும், பஞ்சு அருணாச்சலத்தின் பாடல் வரிகள் மட்டுமின்றி அப்பாடலுக்கு கூடுதலாக உயிர்கொடுத்தது எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் குரல்.
இந்த மூன்று ஜாம்பவான்கள் இணைந்து உருவாக்கிய அப்பாடல் காலம் கடந்து இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது.