Advertisment

நயன்தாரா, சத்யராஜ் நடிப்பை விடுங்க... அந்த குட்டிப் புள்ள நடிப்பை பாருங்க: கனெக்ட் விமர்சனம்

படத்தின் கதை சாதாரணமானது என்றாலும் திரைக்கதையிலுள்ள பல திருப்பங்களும், திகிலும் படம் பார்ப்பவர்களை மிரள வைக்கிறது.படத்தின் நீளம் படத்திற்கு பெரிய பலமாக அமைந்திருக்கிறது .99 நிமிடத்திற்குள் கச்சிதமாக ஒரு திகில் அனுபவத்தை கொடுத்திருக்கிறார்

author-image
WebDesk
New Update
நயன்தாரா, சத்யராஜ் நடிப்பை விடுங்க... அந்த குட்டிப் புள்ள நடிப்பை பாருங்க: கனெக்ட் விமர்சனம்

கொரோனா காலகட்டத்தில் நடைபெறுவதாக அமைந்திருக்கும் இக்கதையில் நாயகியின்(நயன்தாரா) கணவராக வரும் வினய் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றும் டாக்டராக இருக்கிறார்.அதனால் அவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு அவர் மரணம் அடைய,அதன் பிறகு தன்னுடைய குழந்தை தான் தன் உலகம் என வாழ்ந்து கொண்டிருக்கும் நாயகி நயன்தாராவின் வீட்டில் சில அமானுஷ்யங்கள் நடக்கின்றன,அவரது மகளின் நடவடிக்கையில் மாற்றங்கள் ஏற்பட்டு அதன் விளைவாக நடக்கும் நிகழ்வுகளை திகில் கலந்து சொல்லி இருக்கும் படமே "கனெக்ட்".கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து நல்ல கதைகளில் நடித்து வரும் நயன்தாராவின் நடிப்பை மற்றுமொரு பரிணாமத்தில் வெளிப்படுத்தியிருக்கும் படமே கனெக்ட். மாயா படத்திற்கு பிறகு நயன்தாரா ஹாரர் மூவியில் நடிப்பதால் படத்தின் எதிர்பார்ப்புகள் அதிக அளவில் இருந்தது,அதை பூர்த்தி செய்யும் அளவில் அவருடைய நடிப்பும், மிரட்டலான அசைவுகளும் பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

Advertisment
publive-image

தன் மகளின் நிலையை கண்டு வருந்தும் இடங்களில் அம்மாவாகவே வாழ்ந்திருக்கிறார். பல இடங்களில் நயன்தாரா என்னும் நட்சத்திரம் மறைந்து சூசனாகவே மிரட்டியிருக்கிறார்.மேலும் நயன்தாராவின் அப்பா மற்றும் கணவராக வரும் சத்யராஜ் மற்றும் வினையுடைய நடிப்பு படத்திற்கு தேவையான அளவு அமைந்துள்ளது. சத்யராஜை பெரும்பாலும் நாம் ஹாரர் படத்தில் பார்த்ததில்லை என்பதாலோ என்னவோ அவரது நடிப்பு சற்று அதிகமாகவே ஜொலிக்கிறது.நயன்தாராவின் மகளாக நடித்திருக்கும் ஹானிஃபாவின் நடிப்பு மிரட்டல்.தன்னுடைய கதாபாத்திரத்தை கச்சிதமாகவும் திகிலாகவும் வெளிப்படுத்தி அனைவரையும் வியப்படையைச் செய்துள்ளார்.பிரித்வி சந்திரசேகரருடைய இசை இப்படத்தை மற்றுமொரு பரிணாமத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

 பின்னணி இசை பல இடங்களில் நம்மை பயமுறுத்தும். மிரட்டலான பின்னணி இசை இப்படத்தின் முதுகெலும்பாக அமைந்துள்ளது.பொதுவாகவே தமிழ் சினிமாவில் ஹாரர் படம் என்றாலே அதில் காமெடி, நடனம் போன்ற ஜனரஞ்சகமான விஷயங்களை சேர்த்து தான் திரைக்கதை இருக்கும்.ஆனால் மாயா, கேம் ஓவர் போன்ற படங்களின் மூலம் ஒரு தரமான ஹாரர் படத்தை கொடுத்த இயக்குனர் அஸ்வின் சரவணன், அதே பாணியை இப்படத்திலும் தொடர்ந்திருக்கிறார். படத்தின் கதை சாதாரணமானது என்றாலும் திரைக்கதையிலுள்ள பல திருப்பங்களும், திகிலும் படம் பார்ப்பவர்களை மிரள வைக்கிறது.படத்தின் நீளம் படத்திற்கு பெரிய பலமாக அமைந்திருக்கிறது .99 நிமிடத்திற்குள் கச்சிதமாக ஒரு திகில் அனுபவத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர்.மொத்தத்தில்,ஹாலிவுட் ஹாரர் படங்களை பார்க்கும் ரசிகர்களுக்கு இது ஒரு சாதாரண படமாகவே தோன்றும், ஆனால் தமிழ் பட ரசிகர்களுக்கு, சிறந்த ஹாரர் அனுபவத்தை கொடுக்கும் படமாக இது அமையலாம்.

(குறிப்பு - சிறந்த சவுண்ட் டிசைன் உள்ள திரையரங்கில் படத்தை பார்க்கவும்.)

செய்தி: நவீன் குமார்

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment