நடிகரும், இயக்குனருமான மனோ பாலா புதன்கிழமை (மே 3) காலமானார். அவரது இறப்புக்கு பலரும் இரங்கல் தெரிவித்தனர்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை என அரசியல் கட்சித் தலைவர்கள் மட்டுமின்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்தியராஜ், விஜய், ஆர்யா, இயக்குனர் பாரதிராஜா, ஹெச். வினோத் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்திருந்தனர்.
700க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள மனோ பாலா 40க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார்.
இது தவிர தொலைக்காட்சித் தொடர்களையும் அவர் இயக்கியுள்ளார். ரஜினிகாந்த்-ஐ வைத்து ஊர்க்காவலன் என்ற மாபெரும் வெற்றிப் படத்தை கொடுத்த மனோ பாலா, பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்தவர். மணிவண்ணனின் நண்பர் ஆவார்.
இந்த நிலையில் இளையராஜா விடுத்துள்ள இரங்கல் செய்தியில், எனக்காக காத்திருந்த இயக்குனர்களில் மனோ பாலாவும் ஒருவர் எனப் பொருள்பட உருக்கமாக பேசினார்.
இந்த வீடியோ தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது.
இளையராஜா அந்த வீடியோவில், “என்னிடம் மிகுந்த மதிப்பும் வைத்திருந்த நண்பர் மனோ பாலா இறந்த செய்தி அறிந்து துயருற்றேன்.
மனோ பாலா ஆரம்பத்தில் பத்திரிகையாளராக தொடங்கி பின்னர் பாரதிராஜாவிடம் உதவியாளராக இணைந்தார். என்னை கோடம்பாக்கம் பாலத்தில் காரில் காண காத்திருந்த எத்தனையோ டைரக்டர்களில் மனோ பாலாவும் ஒருவர்” எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“