விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியின் மூலம் க்யூட் சாக்லேட் பாயாக பிரபலமான அஸ்வினும் தனது நகைச்சுவையால் கலக்கிய புகழும் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சர்ப்ரைஸ் வீடியோ வெளியிட்டுள்ளனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 கிராண்ட் ஃபினாலே நேற்று ஒளிபரப்பானது. பல்வேறு தரப்பட்ட ரசிகர்களைக் கவர்ந்த இந்த நிகழ்ச்சியில், போட்டியாளராக பங்கேற்ற நடிகர் அஸ்வின் ரசிகர்களின் மனம் கவர்ந்த க்யூட்டான சாக்லேட் பாயாக பிரபலமானார். அஸ்வினுக்கு பெரிய அளவில் ரசிகர்களின் ஆதரவு இருந்தது. குக் வித் கோமாளி சீசன் 2 இறுதிப் போட்ட்யில் அஸ்வின் ரன்னர் அப் 2 என மூன்றாவது இடத்தை வென்றார். அதோடு அவருக்கு ரசிகர்களின் இதயங்களைக் கவர்ந்தவர் என்ற பொருளில் Heartthrob of cooku with Comali என்ற விருதும் வழங்கப்பட்டது. இதனால், இவருக்கு விரைவில் சினிமாவில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று ரசிகர்கள் விருப்பம் தெரிவித்தனர்.
அதே போல, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தனது இயல்பான நகைச்சுவையாலும் அவருடைய காமெடி ரியாக்ஷன்களாலும் ரசிகர்கள் இடையே பிரபலமானவர் புகழ். குக் வித் கோமாளி என்றாலே புகழ் என்று சொல்லும் அளவுக்கு புகழ் கோமாளியாக பங்கேற்று கலக்கினார். அவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் எக்ஸ்பிரஷன் கிங் விருது அளிக்கப்பட்டது. இவருக்கும் சினிமா வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்று ரசிகர்கள் விருப்பம் தெரிவித்திருந்தனர். குக் வித் கோமாளி நிகழ்சியில் அஸ்வினும் புகழும் மச்சான் என்று ஒருவருக்கு ஒருவர் நெருக்கமாக அழைத்துக்கொள்வார்கள்.
குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில், அஸ்வின் – புகழ் இருவரும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டு மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
அஸ்வின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: “வணக்கம், எனக்குள்ள நான் ரொம்ப வருஷமா கேட்டுக்கொண்டிருந்தது என கனவு, பல நாள், பல வருஷம் இதற்காக வெயிட் பண்ணிகிட்டிருந்தேன். எப்போ நான் ஒரு படத்துக்கு ஹீரோவாக நடிக்கப்போகிறேன் என்று கேட்டுக்கொண்டிருந்தேன். இந்த ஷோவுக்கு அப்புறம் எல்லாரும் கேட்டுகிட்டே இருந்தீங்க… அதற்கு விடை இன்னைக்கு தெரியும். ஏன்னா நான் இன்னைக்கு ஒரு படம் சைன் பண்ணிட்டேன். அந்த கம்பனி ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ், டைரக்டர் ஹரிஹரன் என்ற புதிய இயக்குனர் இயக்குகிறார். ஒரு நல்ல திரைக்கதையுடன் நல்ல படமாக கொடுக்கப்போகிறார்கள். இதில் ஒரு முக்கியமான ஒரு விஷயம் இருக்கிறது. அது என்னன்னா? உங்களுக்கு புடிச்ச ஒருத்தர் இதில் இருக்கப் போகிறார். எனக்குப் புடிச்ச ஒருத்தர் இருக்கப் போகிறார். அதனால், இந்த படம் உங்களுக்கு மேலும் ஒரு பயங்கர காம்போவாக இருக்கப் போகிறது. அவரு யாருனா?” என்று சஸ்பென்ஸாகப் பேசுகிறார்.
அப்போது மச்சான் என்று உற்சாகமாக கத்திகொண்டு ஓடிவரும் புகழ் எகிறி குதித்து அஸ்வின் இடுப்பில் அமர்ந்து கொள்கிறார். இருவரு சந்தோஷமாக சிரிக்கிறார்கள்.
அந்த வீடியோவில் பேசும் புகழ், “இது வேற லெவல் இல்ல… மச்சான் தயவோட மலை ஏறனும்னு சொன்னாங்க… அதனாலதான் நான் ஃபர்ஸ்ட் மேல ஏறிட்டேன். இப்போது இரண்டு பேரும் சேர்ந்து மலையில ஏறலாம்னு முடிவு பண்ணிட்டோம். அதுவும் இப்படி ஒரு பட வாய்ப்பு. அதுவும் மச்சான் ஹீரோவா நடிக்கிறான். வேற லெவல்ல பயங்கர ஹாப்பியா இருக்கு. என்னதான் குக் வித் கோமாளியில நாங்க காமேடி அது இது என்று பண்ணிட்டாலும், ஒரு ஹீரோ, ஒரு காமெடியன் எந்த அளவு உங்களுக்கு எண்டர்டெயின்மெண்ட் கொடுக்க முடியுமா அந்த அளவுக்கு எண்டர்டெயின்மெண்ட் கொடுப்போம். நீங்க வேற லெவல்ல ரசிச்சு பார்க்கனும்” என்று கூறுகிறார்.
இதையடுத்து, பேசும் அஸ்வின், “கண்டிப்பாக புகழும் நானும் அவ்வளவாக பேசி பார்த்திருக்க மாட்டீங்க… ஆஃப் ஸ்கிரீன்ல நாங்க நிறைய பேசியிருக்கிறோம். இந்த படத்தில் நாங்க.. என்று கூறுகிறார். உடனே குறுக்கிடும் புகழ், இந்த படத்தில நிறைய ஆஃப் ஸ்கிரீன்ல ஃபுல்லா நிறைய பேசறோம். அதை ரெக்கார்ட் பண்ணி உங்களுகு சினிமாவில் காட்டறோம். என்று கூறி இருவரும் சிரிக்கிறார்கள்.
அஸ்வின்: எங்களுக்கு காட்டிய அன்பையும் ஆதரவையும் எப்போதும் காட்டிக்கொண்டே இருங்க…” என்று கூறி அஸ்வினும் புகழும் ரசிகர்களுக்கு நன்றி கூறுகின்றனர்.
குக் வித் கோமாளி சீசன் 2 பிரபலம் அஸ்வின் ஹீரோவாக நடிக்கும் படத்தில் புகழும் இணைந்துள்ளார். இந்த தகவலை அஸ்வின் புகழ் இருவரும் சர்பிரைஸ் வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“