விஜய் டிவியில் கடந்த 6 மாதங்களாக குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியின் இறுதிப்பாட்டி நேற்று ஒளிபரப்பானது. அதில், கோமாளிகளுக்கு கொஞ்சும் தமிழ் கோமாளி, கண்டெண்ட் குயீன், திடீர் கோமாளி என பல் ஸ்பெஷல் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பார்வையாளர்கள் இடையே கிடைத்த பெரும் வரவேற்பைத் தொடர்ந்து, குக் வித் கோமாளி சீசன் 2 தொடங்கப்பட்டது. பிரபலங்கள் பங்கேற்கும் ஒரு சமையல் நகைச்சுவை நிகழ்ச்சிக்கு இவ்வளவு வரவேற்பும் புகழும் கிடைக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி கடந்த நவம்பர் 14ம் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் சனி ஞாயிறு கிழமைகளில் ஆறு மாதங்களாக ஒளிபரப்பாகி வந்தது. இதில் போட்டியாளர்களாக பிரபலங்கள் அஸ்வின், பாபா பாஸ்கர், ஷகிலா, பவித்ரா லட்சுமி, கனி, தர்ஷா குப்தா உள்ளிட்டோர் கலதுகொண்டார். அதே போல, கோமாளிகளாக புகழ், சுனிதா, மணிமேகலை, ஷிவாங்கி, தங்கதுரை, பாலா, மதுரை முத்து உள்ளிட்டோர் பார்வையாளர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்தனர். இந்த நிகழ்ச்சியை ரக்ஷன் தொகுத்து வழங்க பிரபல சமையல் கலைஞர்கள் செஃப் தாமு, வெங்கடேஷ் பட் டாஸ்க்குகளை அளித்து போட்டிகளை நடத்தினார்கள்.
விஜய் டிவியில் கடந்த நவம்பர் 14 முதல் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி சீசன் 2 நிகச்சியின் இறுதிப் போட்டி எபிசோடு நேற்று தமிழ் புத்தாண்டு சித்திரை திருநாளில் ஒளிபரப்பானது. இறுதிப் போட்டியில், ஷகிலா, கனி, அஸ்வின், பாபா பாஸ்கர், பவித்ரா லட்சுமி ஆகியோர் பங்கேற்றனர். கொலாகலமாக நடைபெற்ற இறுதிப்போட்டியில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் சிம்பு அனைவருக்கும் விருதுகளை வழங்கி பாராட்டினார். நடிகை கனி குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியின் டைட்டிலை வென்றார். அவரை அடுத்து இரண்டாவது இடத்தை ஷகிலா வென்றார். மூன்றாவது இடத்தை அஸ்வின் பிடித்தார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர், ரன்னர் அப் 1, ரன்னர் அப் 2 மட்டுமில்லாமல் அனைத்து போட்டியாளர்களுக்கும் அனைத்து கோமாளிகளுக்கும் விருதுகளும் பரிசுகளும் வழங்கப்பட்டது. அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து வந்து தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முத்திரை பதித்துள்ள நடிகை சுனிதாவுக்கு கொஞ்சும் தமிழ் கோமாளி விருது வழங்கப்பட்டது. ஒன் மேன் ஆர்மி விருது போட்டியாளராக பங்கேற்ற டான்ஸ் மாஸ்டர் பாபா பாஸ்கருக்கு ஒன் மேன் ஆர்மி விருது வழங்கப்பட்டது. கோமாளியாக பங்கேற்ற தங்கதுரைக்கு திடீர் கோமாளி விருது வழங்கப்பட்டது. டைட்டில் வின்னர் கனிக்கும் வொண்டர் வுமன் விருது வழங்கப்பட்டது.
கோமாளியாக கலக்கிய மணிமேகலைக்கு கண்டெண்ட் குயீன் விருது வழங்கப்பட்டது. சரத்துக்கு உழைப்பாளி விருது வழங்கப்பட்டது.
தனது வெகுளித் தனமான பேச்சால் ரசிகர்களைக் கவர்ந்து சிரிக்கவைத்த ஷிவாங்கிக்கு எங்க வீட்டுப் பிள்ளை விருது வழங்கப்பட்டது.
கோமாளியாக தனது ரியாக்ஷன் மூலமாகவே ரசிகர்களை சிரிக்க வைத்த புகழுக்கு எக்ஸ்பிரஷன் கிங் விருது வழங்கப்பட்டது.
குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் க்யூட்டாக வலம் வந்த நடிகை பவித்ரா லட்சுமிக்கு டெர்மினேட்டர் விருது வழங்கப்பட்டது. தர்ஷா குப்தாவுக்கு சார்மிங் குக் விருது வழங்கப்பட்டது.
குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியின் ரன்னர் அப் 1 என இரண்டாம் இடத்தைப் பிடித்த நடிகை ஷகிலாவுக்கு ஏஞ்சல் ஆஃப் குக் வித் கோமாளி 2 விருது வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் யார் என்ன பேசினாலும் தனது கவுண்டர் டயலாக்குகளால் கலாய்த்த பாலாவுக்கு கவுண்ட்டர் கிங் விருது வழங்கப்பட்டது.
தனது நகைச்சுவைகளால் ரசிகர்களை சிரிக்க வைத்த மதுரை முத்துவுக்கு காமெடி ஐகான் விருது வழங்கப்பட்டது.
புதுப்பாட்டாசு விருது சக்திக்கும் சைலண்ட் கில்லர் விருது ரித்திகாவுக்கும் வழங்கப்பட்டது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொகுப்பாளர் ரக்ஷனுக்கு டார்லிங் ஆஃப் குக் வித் கோமாளி விருது வழங்கப்பட்டது.
இறுதியாக, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று டாஸ்க்குகளை வழங்கி நிகழ்ச்சியின் தூணாக இருந்த சமையல் கலைஞர்கள் செஃப் தாமு, வெங்கடேஷ் பட் இருவருக்கும் பில்லர்ஸ் ஆஃப் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் தூண்கள் என்ற விருது வழங்கப்பட்டது.
குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு விருது வழங்கியதோடு மட்டுமில்லாமல் கோமாளிகளுக்கும் போட்டியாளர்களுக்கும் பரிசுகளும் வழங்கப்பட்டது. குக் வித் கோமாளி சீசன் 2 இறுதி எபிசோடில் நிகழ்ச்சி முடிவதால் போட்டியாளர்களும் கோமாளிகளும் செஃப் தாமு வெங்கடேஷ் பட் என அனைவரும் உருக்கமாக கண்கலங்கியபடி தங்கள் அன்பை பகிர்ந்துகொண்டனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.