’கடைக்குட்டி சிங்கம்’, ’மகாமுனி’, ’டாக்டர்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளவர் தீபா. பல காலமாக சினிமா துறையில் இருந்து வந்தாலும் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். ’கடைகுட்டி சிங்கம்’ தீபாவாக நிகழ்ச்சியில் அறிமுகமானவர் இப்போது ’குக் வித் கோமாளி’ தீபாவாக மாறியுள்ளார்.
நிகழ்ச்சியில் அவரது சமையலைவிட அவர் செய்யும் காமெடியான விஷயங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. நிகழ்ச்சியில் எந்தவொரு விஷயத்தை சொல்ல வரும்போதும் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துக்கொண்டே சொல்வது, எல்லோருடனும் பாசத்தோடு பழகுவது அவரது நல்ல மனசைக் காட்டுகிறது. நிகழ்ச்சியில் சீக்கிரமே எலிமினேட் ஆனாலும் ஸ்பெஷல் எபிசோடுகளில் கலந்துக் கொண்டு வந்தார்.
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்புடன் குஷி என்ற சீரியலில் ஹீரோ பிரஜினுக்கு அம்மாவாக நடித்து வருகிறார் தீபா.
இந்நிலையில் சமீபத்தில் 6-வது விஜய் டெலி அவார்ட்ஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் அன்புடன் குஷி சீரியலுக்காக, தனக்கு விருது கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு வந்திருந்த தீபா தனக்கு விருது கிடைக்கவில்லை என்பதை அறிந்து சற்று ஏமாற்றம் அடைந்தார். மேலும், மேடையில் பேசிய அவர், இந்த மேடையில் ஏறியதே எனக்கு விருது கிடைத்தது போன்றது தான், ஆனாலும் தனக்கு விருது வழங்கப்பட்டால், தனது தாயின் புகைப்படத்தை காட்டலாம் என்று நினைத்து இருந்ததாகவும், அடுத்த முறை இன்னும் நன்றாக நடித்து, நிச்சயம் விருது வாங்கி தனது தாயின் புகைப்படத்தை காட்டுவேன் என்று கண்ணீர் மல்க கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil