விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி. தற்போது இரண்டு சீசன் முடிவடைந்த நிலையில் மூன்றாவது சீசன் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணமே அதில் வரும் கோமாளிகள்தான். குறிப்பாக புகழ், ஷிவாங்கி, பாலா, மணிமேகலை, சரத் உள்ளிட்ட கோமாளிகள் செய்யும் சேட்டைகள் அனைவரையும் சிரிக்க வைத்தன.
முதல் சீசன் ஒளிபரப்பான போது ஒரு சமையல் நிகழ்ச்சியில் கோமாளிகளுக்கு என்ன வேலை என ஆரம்பத்தில் கேள்வி எழுந்தது. ஆனால் அவர்கள் தான் இந்த நிகழ்ச்சியை சுவாரஸ்யாமாக கொண்டு சென்றனர். முதல் சீசனில் நடிகை வனிதாவும், இரண்டாவது சீசனில் கனியும் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக வந்து அதிக ரசிகர்களை பெற்றவர்களில் ஒருவர் ஷிவாங்கி. இவர் முதலில் ஒரு பாடகராக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். பின்னர் சூப்பர் சிங்கர் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியிலும் கலந்துக் கொண்டு பாடினார். அந்த நிகழ்ச்சிகளில் அவரது வெகுளித்தனமான பேச்சு அனைவரையும் சிரிப்பூட்டியது. இதன் மூலம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஒரு கோமாளியாக வந்தார்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ஷிவாங்கிக்கு திரைப்பட வாய்ப்புகளும் வந்துள்ளது. ஷிவாங்கி, சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘டான்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ஆர்டிகிள் 15 தமிழ் ரீமேக்கிலும் ஷிவாங்கி நடிக்க உள்ளார். மேலும் விஜய் சேதுபதி, அருண் விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்து வருகிறார்.
இதேபோல், குக் வித் கோமாளியில் பங்குபெற்ற தர்ஷா குப்தா, பவித்ரா லட்சுமி ஆகியோரும் திரைப்படங்களில் ஹீரோயினாக நடிக்க உள்ளனர். அஸ்வினும் திரைப்படங்களில் நடிக்க உள்ளார்.
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ஷிவாங்கியை பின் தொடர்வோரின் எண்ணிக்கை 3 மில்லியனாக உயர்ந்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராமில் கணக்கை துவங்கிய ஷிவாங்கிக்கு 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 1 மில்லியன் ஃபாலோயர்கள் இருந்தனர். அதன்பின் பிப்ரவரி மாதத்தில் ஷிவாங்கியை பின் தொடர்வோரின் எண்ணிக்கை 2 மில்லியனாக உயர்ந்தது. தற்போது இரண்டாவது சீசன் முடிந்து பட வாய்ப்புகள் பெற்று வரும் நிலையில் நான்கே மாதங்களில் ஃபாலோயர்களின் எண்ணிக்கை 3 மில்லியனாக உயர்ந்துள்ளது.
இதேபோல் குக் வித் கோமாளி அஸ்வின், புகழ் உள்ளிட்டோரது இன்ஸ்டாகிராம் கணக்குகளையும் மில்லியன் கணக்கிலான ரசிகர்கள் பின் தொடர்வகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil