Cooku with Comali season 3 latest update: விஜய் டிவியில் இதுவரை ஒளிபரப்பாகிய ரியாலிட்டி ஷோக்களில் ‘குக் வித் கோமாளி’ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ஒன்றாக வலம் வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோமாளிகளை குறிப்பிட்டு கூறலாம். கொடுக்கப்படும் டாஸ்க்குகளின் போது அவர்கள் செய்யும் சேட்டைகளும் காமெடிகளும் நிகழ்ச்சியை பார்ப்பவர்களுக்கு அலுப்பு ஏற்படுத்தாமல் இருந்தது. அதிலும் இந்த ஆண்டு ஒளிபரப்பாகிய சீசன் 2 முதல் சீசனை விட நன்றாகவே இருந்தது என பல ரசிகர்கள் தெரிவித்தனர். மேலும், சீசன் 2 ஒளிபரப்பாகிய போது விஜய் டிவியில் அப்போது ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பி ரேட்டிங்கையே ‘ஓவர் டேக்’ செய்திருந்தது.

இந்த நிகழ்ச்சியின் சீசன் 3 எப்போது ஆரம்பமாகும் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து உள்ள நிலையில், சீசன் 3 குறித்த சில தகவல்கள் அவ்வப்போது வெளிவந்த வண்ணமே உள்ளது. சமீபத்தில் கூட இந்த நிகழ்ச்சியின் நடுவர் செப் வெங்கடேஷ் பட் சீசன் 3 குறித்து முக்கிய தகவல் ஒன்றை கொடுத்திருந்தார். அதில், ‘அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் குக் வித் கோமாளியின் 3ம் சீசன் தொடங்க வாய்ப்பு இருக்கிறது’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்த மகிழ்ச்சியான விடயத்தை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வரும் ரசிகர்கள் ‘குக் வித் கோமாளி’ சீசன் 3ல் எந்தெந்த நட்சத்திரங்கள் போட்டியாளர்களாக இடம் பிடிப்பார்கள் என கணித்து வருகிறார்கள். மேலும் சீசன் 2ல் கோமாளிகளாக வந்து அசத்திய அதே கோமாளிகள் மீண்டும் இடம் பிடிப்பார்களா எனவும் ஆவல் கொண்டுள்ளனர்.
இருப்பினும், இந்த நிகழ்ச்சியின் சீசன் 2ல் கலந்து கொண்ட போட்டியாளர்கள் கோமாளிகள் என அனைவருக்கும் வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்துள்ளது. அஸ்வின் ஹீரோவாக நடிக்கும் படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. இதில் புகழ் மற்றும் ஷிவாங்கி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தவிர, புகழ் மற்றும் ஷிவாங்கி தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் கமிட் ஆகி நடித்து வருகின்றனர். எனவே, சீசன் 3ல் இவர்கள் கலந்து கொள்ள வாய்ப்பில்லை என சின்னத்திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளி வரும் என எதிர்பார்க்கலாம்.

“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறt.me/ietamil“