/indian-express-tamil/media/media_files/2025/08/22/screenshot-2025-08-22-104823-2025-08-22-10-48-41.jpg)
ரஜினிகாந்தும் லோகேஷ் கனகராஜும் இணைந்து உருவாக்கிய 'கூலி' திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. இந்த கூட்டணியைப் பார்த்ததுமே ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு உருவானது.
"கோலிவுட்டில் ஒரு தரமான, மாஸ் மற்றும் கன்டெண்ட் கலந்த படம் வரப்போகிறது" என்பதே பெரும்பான்மையினரின் நம்பிக்கையாக இருந்தது.
படத்தின் ட்ரெய்லர் எதிர்பார்த்த அளவிற்கு தாக்கம் ஏற்படுத்தவில்லை என்றாலும், லோகேஷ் தனது முந்தைய படங்களில் காட்டியதுபோல் இந்த முறையும் ஒரு தனி முத்திரை பதித்திருப்பார், ரசிகர்களுக்கு அதிரடி அனுபவம் கிடைக்கும் என அவர்கள் நம்பியிருந்தனர்.
ஆனால் இந்த நம்பிக்கையை 'கூலி' கடுமையாக ஏமாற்றியதாகவே பலரும் கூறுகின்றனர்.
திரைப்படம் வெளியான முதல் நாளே விமர்சன ரீதியாக பெரும் எதிர்மறை விமர்சனங்களை சந்தித்து, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பெரும் விரக்தியை ஏற்படுத்தியது.
குறிப்பாக லோகேஷின் இயக்கத்தில் அதிக எதிர்பார்ப்புடன் காத்திருந்த ரசிகர்களுக்கு இது ஒரு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது.
லோகேஷ் கனகராஜின் மாகரம், கைதி ஆகிய படங்கள் அனைவருக்குமே பிடித்ததற்கு காரணம் அந்தப் படங்களில் இருந்த மேக்கிங்கும், நேட்டிவிட்டியும், லாஜிக்கும்தான்.
ஆனால் அதற்கு பிறகு அவர் எடுத்த மாஸ்டர், விக்ரம், லியோ ஆகிய மூன்று படங்களிலும் அந்த இரண்டு விஷயங்களும் கொஞ்சம் கொஞ்சமாக தேய ஆரம்பித்து; கூலி படத்தில் அது சுத்தமாகவே இல்லை என்ற நிலைதான் இருந்தது.
படம் பார்த்த பலரும் இப்படத்தை கதையை நம்பி எடுத்தாரா இல்லை ரஜினியை நம்பி எடுத்தாரா என்ற கேள்விகள் எழுந்தன. முக்கியமாக ஒட்டுமொத்த படத்தையும் ரஜினியின் தோளில் வைத்துவிட்டார் லோகி.
எவ்வளவு பெரிய ஸ்டார் படத்துக்குள் இருந்தாலும்; கதையும், திரைக்கதையும்தான் அந்தப் படத்தை தாங்கும்; நடிகரால் முடியாது என்பதை இந்தப் படம் இயக்குநருக்கு சொல்லிக்கொடுத்திருக்கும் என்ற கருத்துக்கள் நிலவுகின்றன.
'கூலி' திரைப்படம் விமர்சன ரீதியாக பெரிதும் விமர்சிக்கப்பட்டது. ரசிகர்களும், விமர்சகர்களும் எதிர்பார்த்த தரத்தை படம் வழங்கவில்லை என்பதே பெரும்பாலானோரின் கருத்தாகும்.
இந்த நிலைமை ரஜினிகாந்துக்கும், இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கும் ஒரு அதிர்ச்சியாக இருந்திருக்க வாய்ப்புள்ளது, ஏனெனில் இப்படியொரு விமர்சன எதிர்வினையை அவர்கள் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள் என்பதே உண்மை.
ஆனால் விமர்சனங்களில் எதிர்மறை கருத்துக்கள் இருந்த போதிலும், வசூல் ரீதியாக 'கூலி' பெரும் வெற்றியைப் பெற்றது.
வெளியான முதல் நாளிலேயே ரூ.151 கோடி வசூலித்து, லோகேஷின் முந்தைய ஹிட் படமான 'லியோ' வின் தொடக்க வசூலைக் கடந்தது. அதன் பின், படத்தின் முதல் நான்கு நாட்களில் ரூ.404 கோடி வரை வசூலித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வளவு விமர்சனங்களை சந்தித்த ஒரு படம் இத்தனை பெரிய வசூலை பெற்றது என்பது லோகேஷ்-ரஜினி கூட்டணியின் வெற்றி தான் என்று ரசிகர்கள் மத்தியில் ஒரு பேச்சு நிலவுகிறது.
படம் ஆரம்பத்தில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றாலும், நீண்ட காலத்திற்கான வசூல் ரன் தொடரும் வாய்ப்பு குறைவாகவே தெரிகிறது. குறிப்பாக ₹1000 கோடி கிளப்பில் சேரும் சாத்தியம் மிகவும் குறைந்திருக்கின்றது.
ஏனெனில் தொடர்ந்து வரும் நாட்களில் படத்துக்கான விழிப்புணர்வும், பார்வையாளர் வருகையும் குறைந்து வருவதாகத் தெரிகிறது.
தற்போதைய சூழ்நிலையைப் பொருத்தவரை, 'கூலி' திரைப்படத்தின் வசூல் தினந்தோறும் குறைந்து வருவதை சாகினில்க் எனும் இணையதளத்தில் வெளியிடப்படும் தரவுகள் உறுதிப்படுத்துகின்றன.
அந்தத் தரவுகளின் படி, நேற்று முன்தினம் இந்தியாவில் ரூ.7.5 கோடி வசூலித்த படம், எட்டாவது நாளான நேற்று வெறும் ரூ.6.25 கோடியே வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கணக்குகளை பார்த்த ரசிகர்கள், “வசூல் இப்படித்தான் தினந்தோறும் குறைந்துக்கொண்டே போய்க்கொண்டிருந்தால், இன்னும் சில நாள்களில் 'கூலி' யை தியேட்டர்களிலிருந்து எடுத்து விட வேண்டிய நிலை வந்துவிடும் போலிருக்கே?” எனத் தயக்கம் மற்றும் கேள்விகளை எழுப்பத் தொடங்கியுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.