/indian-express-tamil/media/media_files/2025/08/14/coolie-rajinikanth-2025-08-14-16-03-57.jpg)
நடப்பு ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று கூலி. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 'கூலி' திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தையே பெற்று வருகிறது. 'அவர் எப்பவுமே நம்மளை விட ஒரு அடி முன்னாடி இருக்கார், சார்!' என சௌபின் ஷாஹிர் கூறியது போல, ரஜினியின் கேரக்டரான தேவா மற்ற கதாபாத்திரங்களை விட ஒரு படி மேலே இருக்கிறார். ஆனால், லோகேஷின் திரைக்கதை அவரின் முந்தைய படங்களை நினைவூட்டினாலும், 'கூலி' அதன் நிழலாகவே தெரிகிறது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:
படம் லோகேஷின் வழக்கமான 'இன்டர்கட்' பாணியில் தொடங்குகிறது. குற்ற உலகத்தைப் பற்றி ஒரு போலீஸ் தகவல் அளிப்பவர் மூலம் நமக்குத் தெரியப்படுத்துகிறார்கள். ஆனால், ஆரம்பத்திலிருந்தே திரைக்கதையில் ஒரு பிடிப்பு இல்லாமல், கதை குழப்பமாக இருக்கிறது. கதாபாத்திரங்கள் அறிமுகமாகின்றன, கொடூரமான கொலைகள் நடக்கின்றன. ஆனால், எதற்காக, எப்படி என்பது போன்ற கேள்விகளுக்கு உடனடியாக விடை கிடைக்காமல் படம் தடுமாறுகிறது. இது பார்வையாளர்களைக் குழப்பத்தில் ஆழ்த்துகிறது.
லோகேஷின் வழக்கமான 'க்ரைம் க்ரிட்டி கேங்ஸ்டர் டிராமா'வுக்கு இது பொருந்தாமல் போகிறது. ஒரு விடுதி உரிமையாளராக தேவா, மதுபான பழக்கம் குறித்து கடுமையான கருத்துக்களைக் கொண்டிருப்பது, 'மாஸ்டர்' படத்தின் 2-ம் பாகம் போலவே இருக்கிறது. ஒரு நாள், தேவாவுக்கு தனது நீண்ட நாள் நண்பர் ராஜசேகரின் (சத்யராஜ்) மரணச் செய்தி தெரியவருகிறது. சோகத்தில் இருக்கும் தேவா இறுதிச் சடங்கில் கலந்துகொள்கிறார். ஆனால், அவரைப் பார்த்திராத ராஜசேகரின் மூத்த மகள், கோபமாக தேவாவை வெளியேற்றுகிறாள்.
அதே சமயம், தனது நண்பரின் மூன்று மகள்களையும் ஒரு அறியாத எதிரியிடமிருந்து காப்பாற்ற தேவா அந்தப் பகுதியிலேயே தங்கியிருக்கிறார். இந்தக் காட்சிகள் ஒருவிதமான குழப்பத்தை மட்டுமே ஏற்படுத்துகின்றன. இந்தக் குழப்பமான தொடக்கத்திற்குப் பிறகு, படம் ஃபிளாஷ்பேக்கை நம்பி மெதுவாக நகர்கிறது. ஆனால், காட்சிகள் நீண்ட நேரம் நீள்கின்றன. ஒரு காட்சிக்கும் அடுத்த காட்சிக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லாமல் படம் நகர்கிறது.
'கூலி' திரைப்படத்தில் சில நல்ல யோசனைகள் இருந்தாலும், அவை 'விக்ரம்' படத்தில் இருந்ததைப் போல ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. 'கூலி'யில் துணைக் கேரக்டர்கள், குறிப்பாக நாகார்ஜுனா மற்றும் சௌபின் ஷாஹிர், அவர்கள் வெறுமனே ஸ்டைலான வில்லன்களாக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளனர். 'விக்ரம்' படத்தில் ஃபகத் ஃபாசிலின் கதாபாத்திரம் கொடுத்த உணர்ச்சிபூர்வமான ஆழம், 'கூலி'யில் மிஸ்ஸிங். 'விக்ரம்' படத்தில் கமல்ஹாசனின் கேரக்டர் அவரது மரணம் என அனைத்தும் படத்தின் சுவாரஸ்யத்தை அதிகரித்தது. ஆனால், 'கூலி' அப்படி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
அனிருத்தின் இசைதான் இப்படத்தின் மிகப்பெரிய பலம். அவர் அனைத்து விதமான உணர்ச்சிகளுக்கும் ஏற்ற இசையை வழங்கியுள்ளார். குறிப்பாக, உபேந்திரா கதாபாத்திரத்திற்கான பாரம்பரிய இசைக்கருவிகள் மூலம் உருவாக்கப்பட்ட பின்னணி இசை வித்தியாசமாக இருந்தது. ரஜினிகாந்த் தனது நடிப்பால் பல காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார். ஸ்ருதி ஹாசன், உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கடுமையான காட்சிகளில் நடித்து, படத்தின் உணர்வுபூர்வமான காட்சிகளைத் தாங்கிப் பிடித்திருக்கிறார். நாகார்ஜுனா, சௌபின் ஷாஹிர் ஆகியோர் தங்களது வில்லத்தனமான நடிப்பால் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தனர்.
கிரிஷ் கங்காதரனின் ஒளிப்பதிவு அருமை. குறிப்பாக, ஆக்ஷன் காட்சிகள் மற்றும் மென்மையான காட்சிகள் இரண்டையும் அவர் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார். உபேந்திரா மற்றும் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட மேன்ஷன் காட்சி, லோகேஷின் அழகியலுக்கு ஏற்ப அமைந்திருந்தது. ஆனால், மற்ற ஆக்ஷன் காட்சிகள் வழக்கமானவையாக இருந்தன. படத்தின் இறுதியில் ஆமிர் கானின் கேமியோ (cameo) சிரிப்பை வரவழைத்தாலும், அது எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
படத்தில் வரும் ஃபிளாஷ்பேக் காட்சிகள் மட்டுமே ரசிக்கக்கூடியதாக இருந்தன. அந்தக் காட்சிகளில் ரஜினிகாந்த், இளமையான தோற்றத்தில் சிறப்பாக இருந்தார். அந்த இரண்டு காட்சிகளைப் போல, முழு படமும் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.