scorecardresearch

பாவனி, சிபி… இவர்களின் அழகான ஆடைகளுக்கு காரணம் ஒரு இளம்பெண்!

பிக்பாஸ் வீட்டில் பாவனி உடுத்தும் அனைத்து ஆடைகளும் அவருக்கு கூடுதல் அழகை சேர்க்கின்றன. குறிப்பாக வார நாட்களில் புடவை, ஜீன்ஸ், கிராப் டாப்ஸ், சுடிதார் என பாவனி அணியும் எல்லா ஆடைகளும் பார்க்கவே அற்புதமாக இருக்கிறது. இதனால் பலரும் பாவணியின் உடை குறித்து இணையத்தில் தேட ஆரம்பித்தனர்.

indu gopirajan
Costume designer indu gopirajan she is the reason behind of bigg boss contestants beautiful outfits

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தினமும் பல்வேறு திருப்பங்களுடன்  விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. நிகழ்ச்சி முடிய இன்னும் 3 வாரங்களே இருக்கும் நிலையில் இந்த சீசனின் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

குறிப்பாக பிக்பாஸ் சீசன் 5 மற்ற சீசன்களை காட்டிலும் தனித்துவமாக இருக்கிறது. அதற்கு காரணம் போட்டியாளர்கள் யாரையும் சார்ந்திருக்காமல் அவர்களின் கேமை அவர்களை விளையாடுகின்றனர். மற்ற சீசனை போல சக போட்டியாளர்களை முதுகுக்கு பின்னால் பேசாமல், நல்லதோ, கெட்டதோ முகத்துக்கு முன்னே நேரடியாக பேசிவிடுகின்றனர்.

அதனால் தானோ என்னவோ இந்த சீசனில் யாருக்கு ஓட்டுப் போடுவது என தெரியாமல் மக்களே பெரும் குழப்பத்தில் உள்ளனர். இப்படி பிக்பாஸ் நிகழ்ச்சி, போட்டியாளர்களுக்கு இடையே நடக்கும் சண்டைகள், டாஸ்க்குகள் என விறுவிறுப்பாக சென்றாலும் அதையும் தாண்டி சிலரது ஆடைகள் மற்றவர்களின் கவனத்தை ஈர்த்து விடுகின்றன.

ஆள்பாதி ஆடைபாதி என்பது எதுக்கு பொருந்துகிறதோ இல்லையோ பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கண்டிப்பாக பொருந்தும். தினசரி டிவியில் வருவதால் போட்டியாளர்களும் தங்களின் ஆடைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

சில நேரங்களில் சில போட்டியாளர்கள் உடுத்தும் ஆடை ரசிகர்களுக்கு பிடித்துவிட்டால், உடனே அதுபோன்ற மாடல் எங்குக் கிடைக்கும் என இணையத்தில் தேட ஆரம்பித்துவிடுவார்கள்.

இந்த சீசனும் அதற்கு விதிவிலக்கல்ல. போட்டியின் ஆரம்பத்தில் சுருதி அணியும் ஆடைகள் பலரது கவனத்தை ஈர்த்தன. வார நாட்களிலும் சரி, வார இறுதி எபிசோடிலும் அவர் தாவணி, பாவடையுடன் ஹோம்லி லுக்கில் கலக்குவார். குறிப்பாக சுருதி டார்க் ஸ்கின் டோன் என்பதால் அவர் உடைகளை தேர்வு செய்யும்போது நிறங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஏனெனில் சில நிறங்கள் டார்க் ஸ்கின் டோனுடன் ஒத்து போகாது. அப்படி பொருத்தமான நிறங்களை தேர்வு செய்து, அதற்கு இணையாக ஒப்பனை செய்து’ சுருதி பார்க்கவே லட்சணமாக இருப்பார்.

அவரைப் போலவே குறிப்பிட வேண்டிய மற்றொரு போட்டியாளர் பாவனி. பிக்பாஸ் வீட்டில் இதுவரை பாவனி உடுத்தும் அனைத்து ஆடைகளும் அவருக்கு கூடுதல் அழகை சேர்க்கின்றன. குறிப்பாக வார நாட்களில் புடவை, ஜீன்ஸ், கிராப் டாப்ஸ், சுடிதார் என பாவனி அணியும் எல்லா ஆடைகளும் பார்க்கவே அற்புதமாக இருக்கிறது.

இதனால் பலரும் பாவணியின் உடை குறித்து இணையத்தில் தேட ஆரம்பித்தனர். அப்போது தான் பாவணி உடுத்தும் ஆடைகளுக்கு பின்னால் மூன்று காஸ்ட்யூம் டிசைனர்கள் இருப்பதும் அதில் ஒருவர் மாற்றுத்திறனாளி பெண் என்பதும் தெரியவந்தது. பாவனி மட்டுமல்ல சிபிக்கும் இவர்தான் காஸ்ட்யூம் டிசைனர். இன்னும் சொல்லப்போனால் சிபி அவருக்கு உடன்பிறவா ஒரு சகோதரன் போல.

யார் அந்த காஸ்ட்யூம் டிசைனர்?.. வாருங்கள் பார்ப்போம்!

சென்னையைச் சேர்ந்த பிரபல ஆடை வடிவமைப்பாளர் இந்து கோபிராஜன் ஒரு வார்ட்ரோப் ஸ்டைலிஸ்ட், காஸ்ட்யூம் டிசைனர் மற்றும் இல்யூஸ்ட்ரேட்டர்.

27 வயதான இந்து ஒரு மாற்றுத்திறனாளி, நாற்காலி தான் அவருடைய உலகம். ஆனாலும் இந்து அதையெல்லாம் ஓரங்கட்டி விட்டு, தனது விடாமுயற்சியால், ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். பிறகு, தனது தந்தையின் தொழிலுக்கு உதவியாக இருந்து வந்தார்.

அப்போது தான் இந்துவுக்கு ஃபேஷன் மீது மிகப்பெரிய ஆர்வம் வந்தது.  அதற்காக, அவர் ஃபேஷன் டிசைனிங்கில் இரண்டு வருட படிப்பை மேற்கொண்டார். படிப்பை முடித்த பிறகு முதலில் தனக்காக ஆடைகளை டிசைன் செய்ய தொடங்கினார். அங்கிருந்துதான் இந்துவின் பயணம் ஆரம்பமானது.

பெரும்பாலான ஆடை வடிவமைப்பாளர்கள் தங்கள் பிராண்டிற்காக பிரச்சாரம் செய்ய உள்ளூர் அல்லது சர்வதேச மாடல்களைத் தான் நம்பியிருக்கிறார்கள். ஆனால், காஸ்ட்யூம் டிசைனர் இந்து கோபிராஜன், இந்த விதிமுறைகளை மாற்றி மீண்டும் எழுத முடிவு செய்தார். அதற்காக தனது சொந்த பிராண்டிற்கு தானே மாடலிங் செய்தார்.

அவரது ஆடை-வடிவமைக்கும் திறமை பலரை கவர்ந்தது. அதன் காரணமாக “திரையுலகில் இருந்து சில நடிகர்களை ஸ்டைல் ​​செய்யும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. லாக்டவுனுக்கு முன், மிஸ் இந்தியா 2018 அனுக்ரீத்தி வாஸின் வடிவமைப்பில் வேலை செய்தார்.

லாக்-டவுனுக்கு பிறகுதான், அவரது வாழ்க்கையில் பெரிய திருப்பம் நிகழ்ந்தது. அதுவரை ஆடைகளை மட்டுமே வடிவமைத்த இந்து, ஃபேஷன் டிசைனிங் மீது கொண்ட காதலால், சொந்தமாக நிறுவனத்தைத் தொடங்கினார். அதில் தன்னைபோல நிறைய கனவுகளுடன் இருப்பவர்களுக்கு தன் அனுபவத்தை பகிர்ந்து அவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி வருகிறார்.

சன் நெட்வொர்க்கின் ஆதித்யா டிவியிலும் ஃப்ரீலேன்ஸ் ஃபேஷன் ஸ்டைலிஸ்டாக உள்ளார்.

இப்படி மாற்றுத்திறனாளியாக இருந்து படிப்படியாக முன்னேறிய இந்து, இப்போது பல பிரபலங்கலளின் குறிப்பாக அப்கமிங் ஆர்டிஸ்ட், சீரியல் ஆர்டிஸ்ட்களின் விருப்பமான ஃபேஷன் ஸ்டைலிஸ்டாக இருக்கிறார்.

இருந்தாலும் இந்துவுக்கு விஜய் சேதுபதி மற்றும் விஜய தேவரகொண்டா இருவருக்கும் ஸ்டைலிங் செய்ய வேண்டும் என்பது ஆசை.

இறுதியில் ”உங்களுக்கு எது பிடிக்கிறதோ அதை செய்யுங்கள். நீங்கள் நினைப்பது ஒரு நாள் நிறைவேறும்” என்கிறார் இந்த புதுமைப்பெண் இந்து.

பெரும்பாலான மாற்றுத்திறனாளிகளுக்கு ஃப்ரொஃப்ஷனல் வாழ்க்கையில் நிறைய நடைமுறை சிக்கல்கள் உள்ளது. அதனால் பலர் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். அவர்களை போன்ற மனிதர்களுக்கு இந்து கோபிராஜானின் வாழ்க்கை’ மிகப்பெரிய உத்வேகம் அளிக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Costume designer indu gopirajan she is the reason behind of bigg boss contestants beautiful outfits