’எஞ்சாய் எஞ்சாமி’ ’நீயே ஒளி’ பாடல்கள் குறித்து, அமெரிக்காவின் ரோலிங் ஸ்டோன் இசைப் பத்திரிக்கையில் எழுதப்பட்ட கட்டுரையில் பாடலாசிரியர் தெருக்குரல் அறிவின் புகைப்படம் புறக்கணிக்கப்பட்டுள்ளது சர்ச்சையாகியுள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில் வெளியான ‘எஞ்சாய் எஞ்சாமி’ என்ற சுயாதீன பாடல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் முணுமுணுக்க வைத்தது. இந்த பாடலுக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணன் இசையமைத்து இருந்தார். இந்த பாடலை அறிவு எழுதியிருந்தார். அறிவு மற்றும் தீ இணைந்து பாடியதோடு, அந்த பாடலில் நடிக்கவும் செய்தனர்.
இந்த பாடலை மாஜா எனும் சுயாதீன பாடல்களை வெளியிடும் நிறுவனம் வெளியிட்டது. இந்நிறுவனத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பார்ட்னராக உள்ளார். இந்த பாடல் வெளியானதிலிருந்து தற்போது வரை 320 மில்லியன் பார்வைகளையும் 49 லட்சம் லைக்குகளையும் பெற்றுள்ளது.
இதேபோல் சமீபத்தில் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் ’நீயே ஒளி’ என்ற பாடலை அறிவு எழுதியிருந்தார். படம் வெளியாவதற்கு முன் யூடியூபில் வெளியான இந்த பாடலுக்கு ரசிகர்கள் பெரிய வரவேற்பு அளித்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்த இந்த பாடலை அறிவு மற்றும் ஷான் வின்செண்ட் டி பால் ஆகியோர் எழுதியிருந்தனர். கனடாவைச் சேர்ந்த ராப் பாடகரான ஷான், பாடல் எழுதுவதில் உதவியதோடு, அறிவோடு சேர்ந்து பாடியும் இருந்தார். இந்த பாடலையும் மாஜா நிறுவனம் வெளியிட்டது.
இந்த இரு பாடல்களும் பெரிய ஹிட் ஆன நிலையில், மாஜா நிறுவனம் தயாரித்து இருக்கும் இந்த பாடல்கள் குறித்து, அமெரிக்க இசைப் பத்திரிக்கையான ரோலிங் ஸ்டோன் அதன் ஆகஸ்ட் மாத இந்திய பதிப்பில் கவர் ஸ்டோரி வெளியிட்டு இருந்தது. இந்த கவர் ஸ்டோரியில், இரு பாடல்களையும் எழுதிய அறிவு புறக்கணிக்கப்பட்டிருப்பது தற்போது சர்ச்சையாகியுள்ளது.
இந்த கவர் ஸ்டோரி வெளியான ரோலிங் ஸ்டோன் பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் தீ மற்றும் ஷான் வின்செண்ட் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் இரு பாடல்களையும் எழுதி பாடிய அறிவின் புகைப்படம் இடம்பெறவில்லை. அந்த கவர் ஸ்டோரியிலும் அறிவின் பெயர் ஓரிரு இடங்களில் மட்டுமே இடம்பெற்றிருக்கிறது. இதனால் நெட்டிசன்களும் திரைப்பிரபலங்களும் அறிவுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இயக்குனர் பா.ரஞ்சித், நீயே ஒளி பாடலை எழுதியவரும், எஞ்சாய் எஞ்சாமி பாடலை எழுதி பாடியவருமான அறிவின் பெயர் மீண்டும் மறைக்கப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு பாடல்களின் வரிகளுமே பொதுவெளி அங்கீகாரம் அழிக்கப்படுவதற்கு எதிரான சவால்தான் என்பதைப் புரிந்துக் கொள்வது அவ்வளவு கஷ்டமா? என மாஜா மற்றும் ரோலிங் ஸ்டோன் நிறுவனங்களிடம் கேள்வி எழுப்பும் வகையில் ட்விட்டரில் அறிவுக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வன்னி அரசு, எஞ்சாய் எஞ்சாமி பாடல் உலகம் முழுக்கப் பல கோடிப் பேரை ஈர்த்துள்ளது. இசை அமைத்து தயாரித்துள்ள இசையமைப்பாளர் பெயர் இடம் பெற்றுள்ளது. ஆனால் அந்த பாடலை எழுதிய கவிஞர் தெருக்குரல் அறிவின் பெயர் இப்போது நீக்கப்பட்டிருக்கிறது. இது அறிவுச்சுரண்டல். இதற்கான காரணத்தை சந்தோஷ் நாராயணன் விளக்குவாரா? என கேள்வியெழுப்பியுள்ளார்.
அறிவு புறக்கணிப்படுவது முதன்முறை அல்ல. ஏற்கனவே ஸ்போட்டிஃபை தளத்தில் எஞ்சாய் எஞ்சாமி பாடல் ரீமிக்ஸின் போது, ரீமிக்ஸ் செய்த டிஜே ஸ்னேக் பெயர் இடம் பெற்றது, ஆனால் அறிவு புறக்கணிக்கப்பட்டார்.
அமெரிக்காவிலுள்ள டைம்ஸ் ஸ்கொயர் விளம்பரத்தில் எஞ்சாய் எஞ்சாமி பாடல் இடம் பெற்றபோது, தீ மற்றும் டிஜே ஸ்னேக் புகைப்படங்கள் மட்டுமே இடம் பெற்றன.
இந்த பாடல்கள் அறிவின் அரசியல் வெளிப்பாடு என்று கூறும் ரசிகர்கள், அவர் புறக்கணிப்பட்டிருப்பது சமூக ஒடுக்குமுறையின் வெளிப்பாடு என பதிவிட்டு வருகின்றனர். மேலும் இது குறித்து, சந்தோஷ் நாராயணன், ரஹ்மான், தீ மற்றும் ஷான் வின்செண்ட் பதில் அளிக்க வேண்டும் என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த விவகாரம் பூதாகரமானதையடுத்து, ரோலிங் ஸ்டோன் நிறுவனம் ஒரு ட்வீட்டை பகிர்ந்துள்ளது. அதில், தீப்பொறி தமிழ் ராப்பர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் தெருக்குரல் அறிவு, எஞ்சாய் எஞ்சாமி, நீயே ஒளி பாடல்களின் வரிகளை பஞ்ச்கள் நிரம்ப எழுதியவர் என புகழாரம் சூட்டியுள்ளது.
காலா, மாஸ்டர் போன்ற பெரிய நட்சத்திரங்கள் நடித்த படங்களில் பாடல்களை எழுதியும், பாடியும் புகழ்பெற்ற பிறகும் கூட மக்களுக்காகவும், மக்களின் உரிமைகளுக்காகவும், எடுத்துக்கொண்ட அரசியல் நிலைப்பாட்டில் இருந்து விலகாமல் தொடர்ந்து மக்களிசைப் பாடல்களை எழுதியும் பாடியும் வந்தார் அறிவு.
மத அடிப்படையிலான அரசியலுக்கு எதிராக எழுதி பாடிய ‘ஆன்டி இந்தியன்’ என்ற பாடல், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட ஸ்நோலினுக்காக பாடிய பாடல், குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவால் பாதிக்கப்படும் மக்களுக்கு ஆதரவாக பாடிய ‘சண்ட செய்வோம்’ பாடல், ஆணவக் கொலைகள் அதிகரிப்பதைக் கண்டு அமைதி காத்த சமூகத்தை கேள்வி எழுப்பும் விதமாக எழுதி பாடிய ’கள்ள மெளனி’ போன்ற பாடல்கள் மூலம் கவனம் பெற்றவர் அறிவு.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான பாடலுக்காக தற்போதைய முதல்வர் ஸ்டாலின், அறிவை நேரில் அழைத்து பாராட்டினார். இத்தகைய மகத்தான கலைஞன் புறக்கணிக்கப்பட்டிருப்பது நெட்டிசன்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.