Chennai Rain: வங்கக் கடலில் உருவான ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக கடந்த 3, 4-ம் தேதிகளில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. இதனால், பெரும்பாலான இடங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. மக்கள் வெளியில் வரமுடியாமல் தவித்து வருகின்றனர்.
பால், உணவு பொருட்கள் கிடைக்காமல் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
வெள்ள நிவாரணப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள விருப்பமுள்ள தனிநபர்கள் மற்றும் தன்னார்வலக் குழுக்கள், அமைப்புகள் தங்கள் பெயர் உள்ளிட்ட விவரங்களை 9791149789, 9445461712, 9894540669, மற்றும் 7397766651 வாட்ஸ்அப் எண்களில் பதிவு செய்து கொள்ளலாம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், மீட்பு பணிகளில் தன்னார்வலர்களாக இயங்க தனது மக்கள் இயக்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு நடிகர் விஜய் அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் "மிக்ஜாம்" புயல் கனமழை காரணமாக குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் உட்பட பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் குடிநீர் மற்றும் உணவின்றியும் போதிய அடிப்படை வசதிகளின்றியும் தவித்து வருவதாக செய்திகள் வருகின்றன. வெள்ளம்…
— Vijay (@actorvijay) December 6, 2023
’சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ‘மிக்ஜாம்’ புயல் கனமழை காரணமாக குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் உட்பட பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் குடிநீர் மற்றும் உணவின்றியும் போதிய அடிப்படை வசதிகளின்றியும் தவித்து வருவதாக செய்திகள் வருகின்றன. வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் இருந்து மீட்க உதவி கேட்டு இன்னமும் நிறைய குரல்கள் சமூக வலைத்தளங்கள் வழியாக வந்த வண்ணம் உள்ளன.
இவ்வேளையில் மக்கள் இயக்க நிர்வாகிகள் அனைவரும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரசு முன்னெடுக்கும் மீட்பு பணிகளில் தன்னார்வலர்களாக தங்களை ஈடுபடுத்திக் கொண்டு இயன்ற உதவிகளை செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். கைகோர்ப்போம் துயர் துடைப்போம்” என்று தன் ட்விட்டர் பக்கத்தில் விஜய் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் பல்வேறு சமூக பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு உதவும் வகையில் 234 தொகுதிகளிலும் இரவு நேர பாடசாலை திட்டம் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. மக்களின் தேவைக்காக இலவச சட்ட உதவி மையம் தொடங்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சமீபத்தில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழகத்தில் பல இடங்களில் ‘தளபதி விஜய் நூலகம்’ திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.