நடிகர் ரஜினிகாந்திற்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.
51 வது தாதாசாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தனது டிவிட்டர் பக்கத்தில், இந்திய திரைத்துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக 2020ஆம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருது ரஜினிகாந்திற்கு வழங்கப்படுவது மகிழ்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார். மேலும் , ஆஷா போன்ஸ்லே, மோகன்லால், சுபாஷ் காய், பிஸ்வாஜீத் சாட்டர்ஜி மற்றும் சங்கர் மகாதேவன் ஆகியோர் அடங்கிய தேர்வு குழுவுக்கும் மத்திய அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து திரையுலக பிரபலங்களும், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் ரசிர்கள் ஏராளமானோர் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
விருது அறிவிக்கப்பட்ட உடனேயே ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் தலைவருக்கு தாதாசாப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது எனவும், வேறுபட்ட கதாபாத்திரங்கள் மற்றும் கடும் உழைப்பால் உயர்ந்த ரஜினிகாந்த் பல தலைமுறைகளிடம் பிரபலமானவர் என மோடி கூறியுள்ளார்.
ரஜினிகாந்த் 1975 ஆம் ஆண்டு கே பாலச்சந்தர் திரைப்படமான அபூர்வ ராகங்கள் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து பல திரைப்படங்களில் எதிர்மறை பாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்தார். அவர் நடிப்பில் 1995ஆம் ஆண்டில் வெளியான பாஷா திரைப்படத்தில் நிழல் உலக தாதாவாக நடித்திருந்தது நல்ல வரவேற்பை பெற்று அவருக்கு திரைத்துறையில் உச்சத்தை கொடுத்தது.
பின்னர் 2007ல் வெளியான சிவாஜி திரைப்படம் மூலம் இந்திய சினிமாவில் புதிய பாதை உயரத்தை அடைந்தார். இந்த படம் அப்போது100 கோடி கிளிப்பில் இணைந்த மூன்றாவது இந்திய படமாகும்.
ரஜினிகாந்த் தனது புகழ்பெற்ற வாழ்க்கையில் தமிழக அரசின் நான்கு திரைப்பட விருதுகளை வென்றுள்ளார். 2000 ஆம் ஆண்டில் மதிப்புமிக்க பத்ம பூஷண் விருது அவருக்கு வழங்கப்பட்டது.
மேலும் 2016 ஆம் ஆண்டில் பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. இது தவிர, கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவின் 45 வது பதிப்பில் ரஜினிகாந்த்திற்கு இந்திய திரைப்பட ஆளுமைக்கான நூற்றாண்டு விருது வழங்கப்பட்டது.
ஒரு நடிகர் என்பதைத் தவிர, ரஜினிகாந்த் ஒரு தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். 2017 டிசம்பரில், ரஜினிகாந்த் 2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான தனது முடிவை அறிவித்திருந்தார். அதன் பிறகு 2020ல் இறுதியாக தனது முடிவை மாற்றிக்கொண்டு அரசியலில் ஈடுபட போவதில்லை என அறிவித்தார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடைசியாக 2020 ல் தர்பாரில் நடித்திருந்தார். தற்போது மீண்டும் அவர் தனது அடுத்த படமான அண்ணாத்தே படபிடிப்பில் ஈடுபட்டுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”