தலித் ஊராட்சி தலைவராய் நான் அனுபவித்த சாதிய இழிவிற்கு மாமன்னன் திரைப்படம் மருந்திட்டு வருடுகிறது என்று ராசேந்திரப்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் சடையன் பெயரன் தனது முகநூலில் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ‘மாமன்னன்’ திரைப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் வசூலைக் குவித்து வருகிறது. விமர்சன ரீதியாகவும் மாமன்னன் படம் விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பட்டியல் இனத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள், எம்.எல்.ஏ, எம்.பி, ஊராட்சி மன்றத் தலைவர் என பலரும் தங்கள் அனுபவங்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், மாமன்னன் திரைப்படம் குறித்து, கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் அருகே உள்ள ராசேந்திரப்பட்டினம் ஊராட்சி மன்றத் தலைவரும் வி.சி.க மாவட்ட அமைப்பாளருமான சடையன் பெயரன், தலித் ஊராட்சி தலைவராய் நான் அனுபவித்த சாதிய இழிவிற்கு மாமன்னன் மருந்திட்டு வருடுகிறது என்று தனது முகநூல் பக்கத்தில் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
முகநூலில் சடையன் பெயரன் பி.இ (Sadaiyan Peyaran BE) என்ற பெயரில் உள்ள ராசேந்திரப்பட்டினம் ஊராட்சி மன்றத் தலைவரும் வி.சி.க மாவட்ட அமைப்பாளருமான சடையன் பெயரன், தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது: “தமிழகத்தில் தற்போது மாமன்னன் திரைப்படம் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கியிருக்கிறது. இந்த படத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இந்த மாமன்னன் திரைப்படம் தேவர் மகன் என்ற திரைப்படத்துக்கு எதிராக எடுக்கப்பட்ட திரைப்படம் என்றும் மாரி செல்வராஜ் ஒரு சாதி கலவரத்தை உருவாக்க முயற்சி செய்திருக்கிறார் என்றும் ஒரு பக்கம் கருத்து தெரிவிக்கிறார்கள்.
இன்னொரு பக்கம், தலித் மக்களுடைய வலியை, அவர்களுடைய வேதனையை, அவர்களுடைய உரிமையை மாமன்ன எடுத்துப் பேசி இருக்கிறது. மாரி செல்வராஜின் மாமன்னன் திரைப்படம் வரவேற்கப்பட வேண்டும் என்று இன்னொரு பக்கம் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மாமன்னன் திரைப்படம் ஒரு ஜனநாயக சக்திகளின் புரிதலில், சமூக நீதி பேசுகிற ஒரு தரமான படமாகத்தான் பார்க்கப்படுகிறது. இதில் எந்த ஒரு மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது. ஒவ்வொரு ஊரிலும் பல மாமன்னர்கள் இருக்கிறார்கள். அந்த திரைப்படத்தில் வருகின்ற வடிவேலு அவர்களுக்கு ஏற்படுகின்ற, அந்த வலிகளைப் போல, பல்வேறு வலிகளை தாங்கிக்கொண்டுதான் கிராமங்களில், நகரங்களில் தலித் மக்கள் இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
திராவிடக் கட்சிகள் ஆட்சிக் காலத்தில்தான், தலித் பிரதிநிதிகளை இன்றைக்கும் அடிமைகளாகத்தான் நடத்துகிறார்கள். வெறுமனே கட்சி அடிமைகளாக நடத்துகிறார்கள். 40-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தபோதும், அவர்களுக்கு ஆதி திராவிடர் நலத் துறை போன்றவற்றில்தான் அமைச்சர் பதவி வழங்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் 25% இருக்கின்ற இந்த மக்களுக்கு வெறும் 3 அமைச்சர்கள் பதவி வழங்கி சமூகநீதி பேசுகிற அரசுகள்தன் நடந்து வருகின்றன.
ஒரு ஊராட்சி மன்றத் தலைவராக நான் பொறுப்பேற்ற பிறகு, மாமன்னன் வடிவேலுவுக்கு நிகழ்ந்ததைப் போல, எனக்கும் பல்வேறு நிகழ்வுகள் நிகழ்ந்திருக்கிறது. அந்த வலிகளை எல்லாம், வேதனைகளை எல்லாம் எங்கே போய் சொல்வதென்று தெரியாத சூழ்நிலை இருக்கின்றது.
இந்த காயங்களுக்கு வலிகளுக்கு மருந்து போடுகிற ஒரு திரைப்படமாக இந்த மாமன்னன் திரைப்படம் வந்திருக்கிறது.
நான் ஒரு ஊராட்சி மன்றத் தலைவராக, மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் வீடுகளுக்கு செல்கிறபோது, ஒன்று அவர் வீட்டை விட்டு வெளியே வந்து நம்மிடம் நின்றுகொண்டே பேசுவார். நாம் வீட்டுக்குள் சென்றுவிட்டால், அவரும் நின்றுகொண்டே பேசுவார். அவர்கள் வீட்டில் இருக்கைகள் இருக்கும் அந்த இருக்கைகளில் நம்மை அமரச் சொல்கிற அளவுக்கு அவர்களிடம் ஜனநாயகம் இருக்காது. ஆனால், அவர் திராவிடக் கட்சிகளில் பொறுப்பாளராக இருப்பார். ஆனால், அந்த மனநிலை அவருக்கு வரவே வராது. அப்படியும் இல்லையென்று சொன்னால், தரையில் அவரும் உக்கார்ந்து விடுவார், நம்மையும் தரையில் உக்காரச் சொல்வார். இப்படித்தான் இன்றும் சமூகநீதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் நான் அதனை அனுபவித்திருக்கிறேன். ஒரு ஊராட்சி மன்றத் தலைவராக வந்த பிறகும் கூட, பொறியியல் படித்திருந்தும்கூட, ஒரு கட்சியினுடைய மாவட்ட அமைப்பாளராக இருந்தும்கூட, பல்வேறு தளங்களில் சாதியைக் கடந்து, மதத்தைக் கடந்து மக்கள் பணி ஆற்றிவரும் இந்த சூழ்நிலையிலும்கூட, இப்படிப்பட்ட ஒரு நிகழ்வுகளை நாம், அனுபவிக்கிற ஒரு சூழல் இன்றைக்கு இருக்கிறது. இதைத்தான் மாமன்னன் திரைப்படம் எடுத்துப் பேசுகிறது. இதனை எதிர்ப்பவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும், ஒவ்வொரு ஆதிக்க சாதியையும் போற்றி பல்வேறு திரைப்படங்கள் வந்திருக்கிறது. அந்த திரைப்படங்களை எல்லாம் அவர்கள் எடுத்துப் பேசாமல், விமர்சிக்காமல் மாமன்னன் திரைப்படத்தை மட்டும் விமர்சிப்பது ஒரு மிகப்பெரிய கேடு, சமூகநீதிக்கு எதிரானது, சமத்துவத்துக்கு எதிரானது.
இந்த திரைப்படத்தை வரவேற்க வேண்டியவர்களாக ஜனநாயக சக்திகள் இருக்கிறார்கள். இது போல, மாமன்னன்கள் நாடுதோறும் இருக்கிறார்கல். அவர்களுடைய வலியை, வேதனையை வெளிப்படுத்துகிற, அவற்றுக்கு மருந்துபோடுகிற மாமன்னன் திரைப்படத்தை வரவேற்கிறோம். இயக்குனர் மாரி செல்வராஜுக்கு என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.
இதே போல, தி.மு.க-வைச் சேர்ந்த சென்னை எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஐ. பரந்தாமன் தனது ட்விட்டர் பக்கத்தில், “மாமன்னன் சமூகநீதியை இன்றைய தலைமுறைக்கேற்றார் போல் காண்பிக்கப்பட்ட காவியம்!
வடிவேலு அவர்களின் நடிப்பு பொறுமையின் சிகரம். சிகரத்தின் மணிமகுடம் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் நடிப்பு.
சமூகப்புரட்சி போராட்டத்தில் என்றைக்கும் தமிழ்நாட்டுப்பெண்களுக்கு பங்குண்டு என்பதை திரைக்கதையின் மூலம் கீர்த்தி சுரேஷ் நடிப்பு வானத்தையும், சிகரத்தையும் இணைத்த வானவில்.
தன் நடிப்புத்திறனால் இன்னும் பல படங்களின் மூலம் உதயநிதி ஸ்டாலின் சமூகத்திற்கு வேண்டியதை செய்திருக்கலாமோ என்ற ஏக்கம் இருந்தாலும், நிஜத்தில் கோட்டையிலிருந்து கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் தலைவராக பரிணமித்ததில் மற்றற்ற மகிழ்ச்சி. அதனினும் இது பெரிது என பெருமைக்கொள்கிறேன்.
சமூகநீதிக்காக கலைஞர்100 அவர்கள் எப்படியெல்லாம் பாடுப்பட்டார் என நெஞ்சுக்கு நீதியில் படித்துவருகிறேன்.
எத்தகைய போராட்டத்திற்கிடையில் சமூகநீதியை பாதுகாத்துவருகிறார் என் தலைவர் மு.க. ஸ்டாலின்
என்பதை உணர்ந்து வருகிறேன்.
ஏற்றிவைத்த சமூக நீதி தீபத்தை அணையாமல் இன்னும் பிரகாசமாக ஒளித்திட போராட உதயநிதி ஸ்டாலின் @Udhaystalin ஒரு புதிய தலைமுறை கிடைத்திட்ட பெருமைக்கொள்கிறேன்.
வடிவேலு வெற்றிப்பெற்ற சான்றிதழை வாங்கும்போது நான் சான்றிதழ் பெற்றதாக உணர்ச்சிவயப்பட்டேன் திரையரங்கில்.
இன்று காலை எனது சான்றிதழின் நகலை எடுத்து கையில் வைத்து சிறிதுநேரம் என்னையே அறியாமல் அதனை உற்று நோக்கியிருந்தேன்.
கழகத்தலைவரே நீயே என் ஒளி நீயே என் வழி.
இயக்குனர் @mari_selvaraj திராவிட திரைக் கலைஞர்களின் வாரிசு நம் மாரிஸ் வாழ்த்துக்கள்.
தந்தானா தானா என யுகத்தை மயக்கிய என் அன்பு சகோதரர் யுகபாரதி @YugabhaarathiYb, தன் இசையின் மூலம் இனிமைச்சேர்த்த ஏ.ஆர். ரஹ்மான் @arrahman, வெற்றிப்படத்தைத்தந்த படக்குழுவினருக்கு என் வாழ்த்துக்களும் நன்றியும்.” என்று தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.