ரஜினியின் தர்பார் திரைப்படம் எதிர்பார்த்த வசூலை குவிக்காததால் திரைப்பட விநியோகஸ்தர்கள் தாங்கள் நஷ்டம் அடைந்துள்ளதாகக் கூறி, இழப்பீடு கேட்டு மிரட்டுவதால் படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் பாதுகாப்பு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப்படத்தை ரூ.200 கோடி செலவில் லைகா நிறுவனம் தயாரித்தது. இதில் 70 சதவீத தொகை ரஜினிக்கு சம்பளமாக கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தர்பார் திரைப்படத்தை வாங்கி திரையிட்ட விநியோகஸ்தர்கள், தயாரிப்பு நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, தாங்கள் எதிர்பார்த்த வசூலை தர்பார் திரைப்படம் கொடுக்கவில்லை என்றும் இதனால் தங்களுக்கு ரூ.25 கோடி நஷ்டம் என்றும் கூறினர். மேலும், படம் வெளியாகி ஒரு வாரம் ஆகிவிட்டது. ஆனால், படம் நாங்கள் எதிர்பார்த்த வசூலை ஈட்டவில்லை. நாங்கள் லைகா தயாரிப்பு நிறுவனத்தை அணுகி கேட்டபோது லைகா நிறுவனமும் அதை ஒப்புக்கொண்டது. லைகா நிறுவனம் எங்களிடம் ஒரு வாரம் காத்திருங்கள். நாங்கள் ரஜினி உள்பட அனைவரிடமும் கலந்து ஆலோசித்துவிட்டு ஒரு முடிவுக்கு வருகிறோம்” என்று கூறியதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், திரைப்பட விநியோகஸ்தர்கள் நஷ்டத்துக்க் தாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என்று தயாரிப்பாளர் கையை விரித்துவிட்டார். நாங்கள் ரஜினியை மனதில் வைத்து இரண்டு வாரங்களாக படத்தை திரையிட்டுவருகிறோம். இரண்டு வாரங்கள் ஆகிவிட்டது என்றாலும் நஷ்டம்தான் மிஞ்சியுள்ளது. நாங்கள் திரும்பவும் லைகா நிறுவனத்தை அணுகினோம். அவர்கள் தாங்கள் ஏற்கெனவே 70 கோடி நஷ்டமடைந்துள்ளோம். தாங்கள் ரஜினிக்கும் முருகதாஸுக்கு மிகப்பெரிய அளவில் சம்பளம் கொடுத்துள்ளதாகவும் கூறியதோடு, உங்களுடைய பிரச்னையை அவர்களிடம் கொண்டு செல்லுங்கள்” என்று கூறியதாக தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, நஷ்டம் அடைந்த விநியோகஸ்தர்கள், தங்களுடைய பிரச்னையை தீர்க்காவிட்டால் உண்ணவிரதப் போராட்டம் நடத்துவோம் என்று எச்சரித்தனர்.
இந்த நிலையில், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், தர்பார் படத்தை வெளியிட்ட சில விநியோகஸ்தர்கள் இழப்பீடு கேட்டு தன்னை மிரட்டுவதால் தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
கடந்த காலங்களில் நடிகர் ரஜினிகாந்த், அவர் நடித்து வெளியான பாபா, லிங்கா படங்கள் பாக்ஸ் ஆஃபிஸில் வசூலைக் குவிக்காமல் தோல்வியடைந்தபோது, விநியோகஸ்தர்களுக்கு இழப்பீடு வழங்கியுள்ளார். இருப்பினும், தற்போது, தர்பார் படத்துக்கு இழப்பீடு கோரி விநியோகஸ்தர்கள் கோரிக்கை வைத்துவரும் நிலையில், நடிகர் ரஜினி அவர்களுக்கு இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.