Darbar Movie Box Office: தர்பார் படத்தில் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகக் கூறி இன்று வினியோகஸ்தர்கள் சிலர் சென்னை போயஸ் கார்டன் இல்லத்திற்கு வந்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது. ரஜினிகாந்த் அவர்களை அழைத்து பேச இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
லைக்கா தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படம் அண்மையில் வெளியானது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பெரும் பொருட்செலவில் தயாரான படம் இது. இதனை பெரும் தொகைக்கு வினியோகஸ்தர்கள் பெற்று வெளியிட்டனர். படத்தின் வசூலும் சிறப்பாக இருந்ததாகவே தகவல்கள் வந்தன.
எனினும் வினியோகஸ்தர்களுக்கு இந்தப் படம் லாபம் கொடுக்கவில்லை என்கிற குமுறல் எழுந்திருக்கிறது. அதாவது, 65 கோடி ரூபாய் கொடுத்து தர்பார் திரைப்படத்தை வாங்கியிருந்த விநியோகஸ்தர்களுக்கு அந்த அளவுக்கு தொகை வசூலாகவில்லை என கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து தங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு தொகையை ரஜினிகாந்த் பெற்று தர வேண்டுமென வினியோகஸ்தர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இது தொடர்பாக ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வலியுறுத்துவதற்காக 8 மாவட்ட விநியோகஸ்தர்கள் சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினிகாந்தின் வீட்டிற்கு வந்தனர்.
அவர்களை நாளை ரஜினிகாந்த் சந்தித்து பேச வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து விநியோகஸ்தர்கள் அனைவரும் திரும்பி சென்றனர். ரஜினிகாந்தின் படம் சக்ஸஸ் என பேசப்பட்ட நிலையில், அந்தப் படத்தால் நஷ்டம் என வினியோகஸ்தர்கள் குரல் எழுப்பியிருப்பது திரைத் துறையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.