சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் திரைப்படம் நாளை (ஜன.9) உலகம் முழுவதும் வெளியாகவிருக்கிறது. லிங்கா படத்துக்குப் பிறகு பிளேக் ஹேர் கேரக்டரே வேண்டாம் என்றிருந்த ரஜினியின் முடிவை தூள் தூளாக்கி 69 வயதில் பேட்ட படத்தின் ஆக்ஷன் அவதாரம் எடுக்க வைத்தார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். சாரி... 90'ஸ் கிட் ரஜினி ரசிகர் கார்த்திக் சுப்புராஜ்.
'அட இவரு என்ன யங் கேரக்டருல நடிக்கிறாரு.. சொல்லவே இல்ல...' என்று ஜெர்க்கான ஏ.ஆர்.முருகதாஸ், இத்தனை ஆண்டுகளாக தனக்குள் உருவாக்கி வைத்திருந்த ரஜினியை மீண்டும் தூசித் தட்டி எழுப்பி, அதற்கு அவரே எதிர்பார்க்காத காக்கிச் சட்டையை மாட்டிவிட்டிருக்கிறார் லேட் 70ஸ் கிட் ஏ.ஆர்.முருகதாஸ்.
தான் ரசித்த முரட்டுக்காளை, பில்லா, பொல்லாதவன், பாட்ஷா, அண்ணாமலை, படையப்பா கனவுகளை தர்பாரில் முடிந்த வரை ஆக்கிரமித்திருக்கிறார். இதற்கு 70 வயது ரஜினி எந்த அளவுக்கு பொருந்திப் போயிருக்கிறார் என்பது நாளை தெரிந்துவிடும்.
இதுவரை இல்லாத அளவுக்கு, தர்பார் திரைப்படம் சென்னையில் மட்டும் 650 ஷோக்கள் திரையிடப்படுகிறது. இதில், 400க்கும் அதிகமான ஷோக்களுக்கு டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன.
இதனால், சென்னை நகரில் மட்டும் முதல் நாளில் மிகப்பெரிய ஓப்பனிங் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், முதல் நாள் முதல் காட்சி டிக்கெட் கிடைக்காமல் பல ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
லைக்கா தயாரித்திருக்கும் தர்பார் திரைப்படம் உலகம் முழுவதும் 7000 ஸ்க்ரீன்களில் திரையிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.