தி கேரளா ஸ்டோரி படத்திற்கு உத்தரப் பிரதேச மாநில அரசு இன்று (செவ்வாய்க்கிழமை) வரி விலக்கு அளித்து அறிவித்துள்ளது. மேலும், சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது அமைச்சர்களுடன் படத்தை பார்க்க உள்ளதாகவும் அரசின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
முன்னதாக, நேற்று (திங்கட்கிழமை) மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சட்டம்-ஒழுங்கு அச்சுறுத்தலை சுட்டிக்காட்டி தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டார். இதன் பின்னணியில் இன்று உத்தரப் பிரதேச அரசு படத்திற்கு வரி விலக்கு அளித்துள்ளது. நாடு முழுவதும் படம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், படம் வெளியான 2 நாட்களில் மத்திய பிரதேச பா.ஜ.க அரசு படத்திற்கு வரி விலக்கு அளிப்பதாக அறிவித்தது.
விபுல் ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவாகி வெளியாகி உள்ள திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’. படத்தின் டீசர் வெளியானதில் இருந்து பல சர்ச்சைகள் எழுந்தன. கேரளாவைச் சேர்ந்த பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் சேர்க்கப்படுவது போன்று காட்சிகள் இடம் பெற்றிருக்கும். இது உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாக படக் குழு கூறியது.
இஸ்லாமிய சமூகத்தினரை தவறாக சித்தரிக்கும் வகையில் படம் எடுக்க பட்டுள்ளது எனக் கூறி கேரளா, தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் அரசியல் கட்சியினர், அமைப்புகள் போராட்டம் நடத்தினர். கடந்த மே 5-ம் தேதி படம் வெளியானது. நாம் தமிழர் கட்சி படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியது.
பின்னர், தமிழகத்தில் தி கேரளா ஸ்டோரி படம் திரையிடப்படாது என திரையரங்கு உரிமையாளர்கள் அறிவித்தனர். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் படத்திற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“